நல்வழி
உரை
விநாயகப் பெருமானே பாலும் தேனும் வெல்லப் பாகும் பருப்பும் ஆகிய நான்கு பொருட்களை உனக்குப் படைப்பேன். எனக்கு இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழையும் தர வேண்டுகிறேன்.
1. புண்ணியத்தால் வாழ்வும் பாவத்தால் தாழ்வும் உண்டாகும். ஒருவன் செய்யும் புண்ணிய பாவங்களே அவன் எதிர்காலச் சேமிப்பு ஆகும். எல்லாச் சமயத்தார்களும் சொல்வது இக்கருத்தே. ஆதலால் பாவத்தை நீக்கிப் புண்ணியம் செய்க.
2. துன்பப் படுவோர்க்குக் கொடுத்து உதவுபவர் உயர் குலத்தார் ஆவர். அங்ஙனம் கொடாதவர் தாழ்ந்த குலத்தவர் ஆவர். உண்மை நூலில் சொல்லப்பட்ட கருத்தும் இதுவேயாகும். ஆதலால் பிறவியினால் உயர்வு தாழ்வு இல்லை.
3. துன்பத்தின் இருப்பிடமான இந்த அழியும் உடம்பை மெய் என்று கருதி இராமல், விரைந்து அறம் செய்ய வேண்டும். அறம் செய்யின் வீடுபேறு கிட்டும்.
4 நற்காலம் இல்லாவிடின் திட்டமிட்டுச் செய்யும் காரியமும் நடைபெறாது. நற்காலம் நேரின், கண்ணில்லாதவன் குறிபாராமல் மாமரத்தில் எறிந்த கோலினால் மாங்காய் விழுதல் போல, திட்டமிடாத செயலும் கைகூடும்.
5. ஊழால் வாராதனவற்றை விரும்பி அழைத்தாலும் வரமாட்டா. ஊழால். வரக்கூடியவற்றைப் போமின் என்று வெறுத்தாலும் போகமாட்டா. ஆதலால் இன்பத்தை விரும்பியும் துன்பதை வெறுத்தும் கவலை அடைதல் கூடாது.
6. திரைகடல் ஓடி அளவில்லாமல் பொருள் தேடி வந்தாலும் விதிப்படிதான் ஒருவர் நுகர முடியும். இதனை உணர்ந்து பேராசை கொள்ளாமல் வாழ வேண்டும்.