கடவுள் வாழ்த்து
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச்
சங்கத் தமிழ்மூன்றுந் தா.
நன்மையே செய்க
புண்ணியமாம் பாவம்போம் போனநாட் செய்தவை
மண்ணிற் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத் தோர்சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.
உயர்குலம் இழிகுலம்
சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
ஈகை பயன் வீடுபேறு
இடும்பைக் கிடும்பை இயலுடம்பி தென்றே
இடும்பொய்யை மெய்யென் றிராதே - இடுங்கடுக
உண்டாயின் உண்டாகும் ஊழிற் பெருவலிநோய்
விண்டாரைக் கொண்டாடும் வீடு
காலம் அறிந்து செய்க
எண்ணி ஒருகருமம் யார்க்குஞ்செய் யொண்ணாது
புண்ணியம் வந்தெய்தும் போதல்லாற் - கண்ணில்லான்
மாங்காய் விழவெறிந்த மாத்திரைக்கோல் ஒக்குமே
ஆங்கால மாகு மவர்க்கு.
கவலையடைதல் கூடாது.
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றாற் போகா- இருந்தேங்கி
நெஞ்சம்புண் ணாக நெடுந்துரந் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
பேராசை கூடாது
உள்ள தொழிய ஒருவர்க் கொருசுகமுங்
கொள்ளக் கிடையா குவலயத்தில் - வெள்ளக்
கடலோடி மீண்டு கரையேறி னாலென்
உடலோடு வாழும் உயிர்க்கு