நல்வழி
வஞ்சனையில்லார்க்கு வாழ்வு சிறக்கும்
21. நீரும் நிலமும் நிலம்பொதியும் நெற்கட்டும்
பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும்
வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றும்
தருஞ்சிவந்த தாமரையாள் தான்.
புதைத்த பணத்தால் யாருக்குப் பலன்
22. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக்
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டிங்(கு)
ஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பர்
பாவிகாள் அந்தப் பணம்.
வழக்கில் ஓரம் சொன்னவர் மனையாழ்
23. வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே
பாதாள மூலி படருமே - மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரஞ் சொன்னார் மனை.
வாழ்க்கை மாண்பு ஐந்து
24. நீறில்லா நெற்றியாழ் நெய்யில்லா உண்டிபாழ்
ஆறில்லா ஊருக் கழகுபாழ் - பாரில்
உடன்பிறப் பில்லா வுடம்புபாழ் பாழே
மடக்கொடி யில்லா மனை.
வரவுக் கேற்ற செலவு
25. ஆன முதலில் அதிகஞ் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் - போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு.
பசி வந்திடப்பத்தும் போகும்
26. மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை
தானந் தவமுயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேற் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்.
எல்லாம் இறைவன் செயல்
27. ஒன்றை நினைக்கின் அதுவொழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும் - ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.