46
உரை
35. மரங்களில் பூக்காமல் காய்க்கின்ற மரங்கள் இருப்பது போல மக்களுள்ளும் பிறர் ஏவாமல் தாமே அறிந்து செய்ய வல்லவரும் உண்டு. நன்றாகப் பயன்படுத்தி விதைத்தாலும் முளைத்துப் பயன்தராத விதைகள் போல மூடனுக்கு விளங்குமாறு எடுத்துச் சொன்னாலும் அறிவு உண்டாகாது.
36. நண்டும் சிப்பியும் மூங்கிலும் வாழையும் தாம் அழிவை அடையும் காலத்தில் கருக்களை ஈனும். அவை போல ஒருவன் தன் மனைவியையன்றிப் பிற மகளிரை இச்சிப்பது அவனிடத்துள்ள ஞானம், செல்வம், கல்வி என்னும் மூன்றும் அழிவதற்கு அறிகுறியாம்.
37. இருவினைப் பயன்களை வெல்வதற்கு வேதம் முதலான நூல்களிலும் விதியில்லை. எனினும் நெஞ்சமே அதற்காகக் கவலைப்படாதே. வீடு அடைவதற்கு அவரவர் நிலைக்கு ஏற்றவாறு அமையும் சாதனங்களே உறுதுணையாகும்.
38. அது நல்லது; இது தீயது; இதை நான் செய்தேன்; இதை அவன் செய்தான்; இது ஆகாது; இது ஆகும் என வேறுபடுத்தாமல் ஆன்மாவாகிய தான் தலைவனாகிய இறைவனுடன் ஒன்றுபட்டு நின்ற நிலையே உயிர்பெற வேண்டிய உண்மை நிலையாகும். தன்னின் வேறாக நினைத்துக் கடவுளைத் தேடுவது சம்புப்புல் அறுத்தோன் அதனைக் கட்டுவதற்கு அதுவே கயிறாகும் என்பதை உணராமல் வேறு கயிறுதேடுவதை ஒக்கும்.
39. முப்பது வயதில் விருப்பு, வெறுப்பு, அறியாமை ஆகிய முக்குற்றம் நீங்கப் பெற்று மெய்ப்பொருளாகிய இறையுணர்வை அடைந்து இன்புறவேண்டும். இல்லாவிட்டால் கல்விக்குப் பயனில்லை. கணவன் இல்லாமல் பெண்கள் மூப்படைந்து என்ன பயன்?
40. திருக்குறள், உபநிடதம், தேவாரம், திருக்கோவை, திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்கள் ஒரு பொருளையே சொல்லுவன. இந்நூல்கள் கற்கத் தக்கவை என்று அறி.