பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

உரை



நறுந்தொகை


12. தன் கணவனைப் போற்றுவதே நல்ல குடிப்பிறந்த பெண்ணுக்குச் சிறப்பாகும்.

13. பிறர் தன்னை விரும்பிக் காணுமாறு அழகு செய்து கொள்ளுதல் தாசிக்கு இயல்பாகும். -

14. சிறந்த நூல்களைப் படித்துத் தெளிந்து அடக்கமாக ஒழுகுவதே அறிவுடையார்க்கு மதிப்பாகும்.

15. வறுமையிலும் மானத்தை விட்டுப் பிறரிடம் இரவாமையே ஏழைக்கு மதிப்பாகும்.

16. பனம்பழத்தின் பெரிய விதையிலிருந்து தோன்றும் மரம் மிக உயரமாக வளர்ந்தாலும் ஒருவர் தங்குதற்குக் கூட நிழலைத் தராது. பிறர்க்குப் பயன்படாத உயர் செல்வம் பயனற்றது.

17. மீன் முட்டையை விடச் சிறிதான ஆலம் விதை, மன்னர் நால்வகைப் படைகளோடு தங்குதற்குரிய நிழலைத் தரும். பிறர்க்குப் பயன்படும் சிறிய செல்வமும் சிறப்புடையது.

18. உருவத்தால் செல்வத்தால் பெரியவர் எல்லாம் பெருமை உடையவர் ஆகார். கொடை செய்பவரே பெரியவர்.

19. உருவத்தால் செல்வத்தால் சிறியவர் எல்லோரும் சிறும்ை உடையவர் அல்லர். கொடுக்காதவரே சிறியவர்.

20. பிறந்த பிள்ளைகள் எல்லாம் பிள்ளைகள் இல்லை. குடிக்குப் பெருமை செய்யும் பிள்ளைகளே உண்மைப் பிள்ளைகள்.

21. உறவினர் எல்லாம் உறவினர் இல்லை. துன்பக் காலத்து உதவி செய்பவரே உண்மை உறவினர்.

22. திருமணம் செய்து கொண்ட பெண்கள் எல்லோரும் பெண்கள் இல்லை. இல்லறம் பேணும் பெண்களே உண்மையான மனைவியர்.

23. பசுவின் பாலை வற்றக் காய்ச்சினாலும் அதன் சுவை குறைவதில்லை; மிகும். -

24. பொன்னைத் தீயிட்டுச் சுட்டாலும் அதன் ஒளி குறையாது; அதிகப்படும்.

25. சந்தனக் கட்டையைக் கல்லில் வைத்துத் தேய்த்தாலும் அது தன் மணத்தில் குறைவதில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/54&oldid=1332743" இலிருந்து மீள்விக்கப்பட்டது