பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

உரை


நறுந்தொகை


26. அகிற் கட்டையைத் தீயிட்டுப் புகைத்தாலும் நறுமணத்தையே வீசும்.

27. கடலை எப்படிக் கலக்கினாலும் அது சேறாகாது, தெளிவாகவே இருக்கும். பால், பொன், சந்தனம், அகில், கடல் ஆகிய ஐந்தும் தம்மைப் பிறர் வருத்திய போதும் தமக்குரிய இயல்பில் மாறுபடுவ தில்லை. அவை போல, பெரியோர் தமக்கு மிகுந்த துன்பம் வந்தாலும் தம் உயர் குணங்களிலிருந்து மாறுபடார்.

28. பேய்ச்சுரைக்காயைப் பால் பெய்து சமைத்தாலும் தனக்குரிய கசப்புத் தன்மையில் குறையாது.

29. பலவகையான வாசனைப் பொருள் கூட்டிச் சமைத்தாலும் உள்ளிப்பூண்டு நறுமணம் வீசாது. பேய்ச் சுரைக்காயும் உள்ளிப்பூண்டும் இனியசுவையும் மணமும் கூட்டிச் சமைத்தாலும் சுவையும் மணமும் பெறுவதில்லை. அவை போலச் சிறுமைக் குணம் உடையோர்க்கு அளவற்ற நன்மை செய்தபோதிலும், தம் சிறுமைக் குணத்திலிருந்து அவர்கள் மாறுபடுவதில்லை.

30. ஒருவனுக்கு வரும் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவனே, காரணமாவான்; பிறர் காரணம் ஆகார்.

31. அறிவு குறைந்தோர் செய்யும் சிறு குற்றங்களைப் பெரியோர் பொறுத்துக் கொள்ளுதல் கடமையாகும்.

32. பெரியோர் பொறுப்பாரென்று நினைத்துச் சிறியவர்கள் பெரிய குற்றங்களைச் செய்வார்களானால், பெரியோர் அக்குற்றங்களைப் பொறுக்க மாட்டார்.

33. பல ஆண்டுகள் பழகினாலும் கீழோர் நட்பு நீர்ப்பாசி போல உறுதி பெறாது.

34. ஒருநாள் பழகினாலும் மேலோர் நட்பு ஆழமாகவும் உறுதியாகவும் இருக்கும். ,

35. பிச்சை எடுத்தாலும் கல்வி கற்பது சிறப்பு.

36. படிக்காத ஒருவன் தன்குடிப்பிறப்பின் மேன்மையைப் பேசுதல் நெற்பயிரோடு தோன்றிய பதரை ஒக்கும்.

37. ஒருவன் உயர்ந்த குலத்திற் பிறந்தவனாயினும் படிக்காதவனாயின் தாழ்ந்தவனே ஆவான்.

38. எந்தக் குலத்திற் பிறந்தாலும் யாரா இருந்தாலும் கற்றவரை உயர்வாக அழைப்பர்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/56&oldid=1332745" இலிருந்து மீள்விக்கப்பட்டது