நன்னெறி
உரை
ஒளி வீசும் சடைமுடியையுடைய விநாயகக் கடவுளின் திருவடிகளை வணங்கினால், நன்னெறியில் உள்ள நாற்பது வெண்பாவும் நன்கு மனத்திற் பாடமாகும்.
1. பெண்ணே, எல்லோரையும் புகழ்கின்ற நாக்கு தன்னைப் புகழா விடத்தும், கை அதற்கு நல்ல சுவைப் பொருள்களைக் கொடுக் கின்றது. அதுபோலப் பெரியோரும், தம்மைப் புகழாதவர்க்கும் தாமே சென்று அவர்க்கு வேண்டும் பொருளைக் கொடுப்பர்.
2. பெண்ணே, அன்புடன் சாக்கியர் எறிந்த கல்லை இறைவன் ஏற்றுக் கொண்டான்; அன்பில்லாமல் மன்மதன் எறிந்த மலரை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை. அதலால் நம்மிடத்து அன்புடையார் கூறும் கடுஞ் சொல்லும் இன்சொல்லாகும். அன்பிலார் கூறும் இன்சொல்லும் கொடுஞ்சொல்லாகும்.
3. பெண்ணே, தமக்கு வேண்டும் பொருள் உதவாதவரிட மிருப்பின், பசுவின் கன்றைக் கொண்டு பாலைக் கறந்து கொள்ளுதல் போல, அவர்க்கு உரியவரைக் கொண்டு பெறுதல் வேண்டும்.
4. உதவாத கடல் நீரை மேகம் முகந்து கொண்டு வந்து மழையாகத் தரும். அதுபோல கொடாதவரின் செல்வத்தை வேறு யாராவது எடுத்துக் கொடுப்பர்.
5. பெண்ணே, அரிசியுடன் கூடி இருக்கும் உமி சிறிதளவு நீங்கிப்பின் ஒன்று கூடினாலும், முளைத்தற்குரிய வலிமையை இழந்து விடும். அதுபோலப் பிரியாது நட்பாக இருக்கும் இருவர் சிறிது காலம் பிரிந்து பின் கூடினாலும், அவ்விருவரின் நட்பு சிறப்புக் குறைந்ததேயாகும்.
6. மதிபோன்ற முகத்தையுடையவளே, கண்கள் இரண்டும் தனித்தனியே இரண்டு பொருளைக் காணாமல் ஒரே பொருளைக் காண்பது போலக் கணவனும் மனைவியும் தம்முள் மாறுபாடு இல்லாமல் ஒத்த மனத்துடன் இல்லறக் கடமைகளைச் செய்தல் வேண்டும்.