பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நன்னெறி
 
சிவப்பிரகாசர் இயற்றியது
 
கடவுள் வாழ்த்து

மின்னெறி சடாமுடி விநாயகன் அடிதொழ
நன்னெறி வெண்பா நாற்பதும் வருமே.



புகழ் கருதாமல் உதவுக

1. என்றும் முகமன் இயம்பா தவர்கண்ணுஞ்
சென்று பொருள்கொடுப்பர் தீதற்றோர் - துன்றுசுவை
பூவிற் பொலிகுழலாய் பூங்கை புகழவோ
நாவிற் குதவும் நயந்து.

பெரியோர் வன்சொல்

2. மாசற்ற நெஞ்சுடையார் வன்சொலினி தேனையவர்
பேசுற்ற இன்சொற் பிறிதென்க - ஈசற்கு
நல்லோன் எறிசிலையோ நன்னுதால் ஒண்கருப்பு
வில்லோன் மலரோ விருப்பு.

முறையறிந்து கொள்க

3. தங்கட் குதவிலர்கைத் தாமொன்று கொள்ளினவர்
தங்கட் குரியவராற் றாங்கொள்க - தங்கநெடுங்
குன்றினாற் செய்தனைய கொங்கையாய் ஆவின்பால்
கன்றினாற் கொள்ப கறந்து. - -

செல்வப் பயன்

4. பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி யாக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடனீர் சென்று பெயன்முகந்து
பெய்யாக் கொடுக்கும் பிறர்க்கு.

பிரியா நட்பின் சிறப்பு

5. நீக்கம் அறுமிருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும் - பூக்குழலாய்
நெல்லின் உமிசிறிது நீங்கிப் பழமைபோல்
புல்லினும் திண்மைநிலை போம்.

கணவன் மனைவி கருத்தொற்றுமை

6. காதன் மனையாளும் காதலனும் மாறின்றித்
தீதி லொருகருமம் செய்பவே - ஓதுகலை ,
எண்ணிரண்டு மொன்றுமதி என்முகத்தாய் நோக்கல்தான் கண்ணிரண்டு மொன்றையே காண்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/65&oldid=1332754" இலிருந்து மீள்விக்கப்பட்டது