64
உரை
14. பெண்ணே, எந்தக் காலத்திலும் அசைக்க முடியாதிருந்த மேருமலைக்கும் ஒரு காலத்தில் வளைவு வந்தது. ஆதலால் அழியாத பெருஞ்செல்வக் குடியிற் பிறந்துள்ளோம் என்று தலைமைக் குணம் உடையோர் செல்வச் செருக்கு அடையமாட்டார். -
15. நற்குணமுடைய பெண்ணே, ஊமைகளிடம் பழைய நூல் இருந்தும் பயனில்லை. கண்ணில்லாதவனிடம் விளக்கு இருந்தும் பயனில்லை. அவ்வாறே இவ்வுலகில் அன்பு இல்லாதவனிடம் இடம் பொருள் ஏவல்களும் பிறவும் இருந்தாலும் பயனில்லை.
16. பெரிய கடல் தன்னை அடுத்த சிறிய உப்பங்கழியிலும் சென்று பாயும். அதுபோல, அறிவு ஒழுக்கங்களினால் உயர்ந்தோர் தம்மைச் சார்ந்தவர் தாழ்ந்தவராயினும் அவர் இருக்கும் இடம் சென்று துன்பம் நீக்குவர்.
17. பெண்ணே, செழித்து வளர்ந்து நின்று பழமாகிய பயனைக் கொடுத்து அழிந்த வாழையின்கீழ், கன்றும் தாய் மரம் போலவே கனி கொடுக்கும். அதுபோல 'எம் தந்தை இரப்பவர்க்குக் கொடுத்தமையால் வறுமை அடைந்தான் என்று கருதி அவன் பிள்ளைகள் பிறர்க்கு ஈதலைக் கைவிடார்.
18. ஒலிக்கின்ற வளையல் அணிந்த பெண்ணே, குளிர்ச்சி பொருந்திய திங்களின் வரவால் கடல் பொங்கும்; வெம்மையுடைய ஞாயிற்றின் வரவால் பொங்காது. அது போல மக்கள் இன்சொல் கேட்டு மகிழ்வார்; வன்சொற் கேட்டு மகிழமாட்டார். -
19. மாமரம் தென்றல் வீசும்போது தளிர் காட்டிச் சிறப்புற்றிருக்கும்; சுழல்காற்று வீசும்போது வருந்தும். அதுபோல, கல்வியறிவு ஒழுக்கங்களில் வல்ல பெரியோர். நல்லோர் வருகையால் மகிழ்ச்சியும் தீயவர் வருகையால் துன்பமும் கொள்வர்.
20. பெண்ணே, மிக நோயால் வருந்தும் பிற உறுப்புக்களைக் கண்டு கண் அழும். அதுபோல, பெரியவர் பிறர்படும் துன்பங்களைக் கண்டவுடன், தம் துன்பமாக எண்ணி நெருப்பிற்பட்ட நெய்போல உருகுவர்.