நன்னெறி
65
செல்வச் செருக்குக் கூடாது
14. தொலையாப் பெருஞ் செல்வத் தோற்றத்தோம் என்று
தலையா யவர்செருக்குச் சார்தல் - இலையால்
இரைக்கும்வண் டுதுமலர் ஈர்ங்கோதாய் மேரு
வரைக்கும்வந் தன்று வளைவு.
வாழ்க்கைக்கு அன்பு அடிப்படை
15. இல்லானுக் கன்பிங் கிடம்பொரு ளேவன்மற்(று)
எல்லா மிருந்துமவற் கென்செய்யும் - நல்லாய்
மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழியிலார்க் கேது விளக்கு.
உயர்ந்தோர் உதவும் முறை
16. தம்மையுந் தங்கள் தலைமையும் பார்த்துயர்ந்தோர்
தம்மை மதியார் தமையடைந்தோர் - தம்மின்
இழியினுஞ் செல்வர் இடர்தீர்ப்பர் அல்கு
கழியினுஞ்செல் லாதோ கடல்.
வறுமையிலும் உதவி
17. எந்தைநல் கூர்ந்தான் இரப்பார்க்கீந் தென்றவன்
மைந்தர்தம் ஈகை மறுப்பரோ - பைந்தொடி
நின்று பயனுதவி நில்லா அரம்பையின்கீழ்க்
கன்று முதவுங் கனி.
இன்சொல் இனிமை தரும்
18. இன்சொலா லன்றி இருநீர் வியனுலகம் -
வன்சொலா லென்றும் மகிழாதே - பொன்செய்
அதிர்வளையாய் பொங்கா தழற்கதிரால் தண்ணென்
கதிர்வரவால் பொங்குங் கடல்.
நல்லோர் வரவு நல்கும் இன்பம்
19. நல்லோர் வரவால் நகைமுகம்கொண் டின்புறீஇ
அல்லோர் வரவால் அழுங்குவார் - வல்லோர்
திருந்துந் தளிர்காட்டித் தென்றல்வரத் தேமா
வருந்துஞ் சுழல்கால் வர.
கருணை உள்ளத்தியல்பு
20. பெரியவர்தந் நோய்போற் பிறர்நோய்கண் டுள்ளம்
எரியின் இழுதாவர் என்க - தெரியிழாய்
மண்டு பிணியால் வருந்து பிறவுறுப்பைக்
கண்டு கலுழுமே கண்.