66
உரை
21. கங்கையாற்றின் பெருக்கமானது ஞானிகளால் உணரப்படும்
சிவபெருமானின் சடையைக் கண்ட அளவில் அடங்கும். அதுபோல, இலக்கண நூலுணர்ச்சி இல்லாதவரின் கல்வி, இலக்கண நூலுணர்ச்சி உடையார் முன் பயன்படாது.
22. நஞ்சுடைய பாம்பாயினும் அதன் பருத்த மாணிக்கத்தைக் கண்டு யாரும் நீக்கமாட்டார். பாற்கடலாயினும் அதனிடத்துத் தோன்றிய நஞ்சினை யாரும் விரும்பிக் கொள்ளமாட்டார். ஆதலால் பிறப்புக் காரணமாக உயர்வு தாழ்வு கொள்ளக்கூடாது.
23. பெண்ணே, பலமுறை சிற்றெறும்புகள் ஊர்ந்துவரின் கருங்கல்லும், குழிந்து போகும். அதுபோலப் பெண்களிடம் வாய்ப்பேச்சாகப் பழகி வந்தாலும் மனத்திட்பம் நாளுக்கு நாள் தளர்ந்து போகும்.
24. சோலையில் சுவைமிகுந்த பழங்கள் நிறைய இருப்பினும் வேப்பம் பழத்தையே காக்கைகள் விரும்பும். அதுபோல ஒருவரிடம் நற்குணங்கள் பல இருப்பினும் கீழ்மக்கள் அவரிடம் உள்ள தீக்குணத்தையே பலரிடமும் சென்று எடுத்துப்பேசுவர்.
25. அழகிய கண்களையுடையவளே, தெப்பத்தில் சேர்ந்த கனமுடைய பொருள் கனத்தை இழக்கும். அதுபோல அறிவில்லாத கீழ்மக்களைக் கற்றுணர்ந்த சான்றோர் சேரின் தமது சிறப்பை இழப்பர்.
26. கதிர் ஒளியின் துணைக்கொண்டு மிகப்பெரிய பொருளையும் காட்டும் கருமணியின் உருவம் சிறிய கண்ணின் அளவாகவே இருக்கும். ஆதலால் உருவத்தில் சிறியவர் என்று கருதி அவரிடம் உள்ள அறிவின் பெருமையை யாரும் இகழார்.
27. நாக்கு ஒர் உதவியும் செய்யாதிருக்க, பற்கள் வலிய பொருள்களை மென்று அதற்கு இனிய சுவையைக் கொடுக்கும். அதுபோலச் சான்றோர் எதிர் உதவி கருதாமல் தம்மால் இயன்ற உதவியைப் பிறர்க்கு மெய்வருந்திச் செய்வர்.