பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

உரை



35. வேல் போன்ற கண்களை யுடையவளே, வாழைப்பழத்தை இனிய பால் அவாவும்; புளிப்பாகிய காடிநீர் அதனை விரும்பாது. அதுபோல, கற்ற அறிவினரை மேன்மக்கள் விரும்புவர் கீழோர் அவரை மதியார்.

36. மக்கள் நெல்லுக்கே நீர் இறைப்பர்; காட்டில் உலர்ந்து போகும் புல்லுக்கு நீர் இறைக்க மாட்டார். அது போல் சான்றோரும் நல்லொழுக்கம் உடையவர்க்கே கொடுப்பர்; ஒழுக்கம் இல்லாதவர்க்குக் கொடுக்க மாட்டார்.

37. பெண்ணே, தன்னைத்தானே பெரிதாக நினைத்து நின்ற விந்தமலையானது அகத்தியரால் உயர்வு குறைந்து தாழ்ச்சி அடைந்தது என்பதை நீ அறியாயோ! ஆதலால் பெரியோர் முன் தன்னைத்தானே புகழ்ந்து சொல்லும் அறிவிலியும் தாழ்ந்து போவான்.

38. நற்குணமுடைய பெண்ணே, காய் நாட்சென்று முற்றினால் உண்ணுதற்குரிய இனிய கனியாகும். இளந்தளிர் நாட் சென்று முற்றினால் பயன்இல்லை. அதுபோல நல்லோர் செய்யும் நட்பு நாடோறும் வளர்ந்து பயன்தரும்; தீயோர் செய்யும் நட்பு நாடோறும் வளராது கெடும்.

39. பெண்ணே, செழித்த பூங்கொடியின் பூ மலர்ந்த அன்று மட்டும் மணமுடையதாகிப்பின் கெட்டு விடும். அதுபோல் கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் மிகுதியான நட்பும் கூடியவுடனே தீமையே தரும்.

40. ஆபரணங்கள் அணியும் பிற உறுப்புக்கள் ஆபரணம் அணியாத உறுப்பாகிய கண்ணுக்கு ஒப்பாக மாட்டா. அதுபோல, பொன் ஆபரணங்களை, அணிந்த, அரசர் அவற்றை அணியாத நிலையான பேரறிவை உடைய அறிஞர்க்கு ஒப்பாக மாட்டார்.

நன்னெறி முற்றும்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஏழிளந்தமிழ்.pdf/74&oldid=1332763" இலிருந்து மீள்விக்கப்பட்டது