“ஏ, தாழ்ந்த தமிழகமே!”
புரட்சியின் சிகரம்
- தலைவர் அவர்களே! அருமைத் தோழர்களே!!
மிக உற்சாகத்துடன் ஒரு கவிக்கும் (பாரதிதாசன்) ஒரு பேராசிரியருக்கும் [பேராசிரியர் கா. சு. பிள்ளை] சிறந்த முறையிலே பாராட்டுதல் நடத்துகிற இந்த உங்கள் சம்பவத்திலே, நான் கலந்து கொண்டு பேசுவதற்கும், இதில் பங்கு எடுத்துக்கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கும் எனது மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஒரு சில நாட்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டும்; பல வேலையின் காரணமாக நான் வரத்தவறியதால் முடியவில்லை; அதற்கு மன்னிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்ளுகிறேன். உங்களுக்கு என்னை அறிமுகப்படுத்திய தோழர் தண்டபாணி அவர்கள் பலபடச் சொல்லிவிட்டார். அவர் என்னைப் புரட்சியின் சிகரம் என்றார். புரட்சி இவ்வளவு குள்ளமாயிராது. புரட்சியின் சிகரம் என்றால், அது இங்கே அமர்ந்திருக்கும் டாக்டர் சிதம்பரநாதன் அவர்களுக்குப் பொருந்தும். அவர் மிகவும் உயரமானவர். ஆகவே, நான் புரட்சியின் சிகரத்திற்குப் பக்கத்திலே, மலைச்சாரலிலே நின்றுகொண்டு, ஏதோ சில பேசலாமென்றிருக்கிறேன்.
ஒரே இனம்
கவிஞர் பாரதிதாசன் அவர்கள் அளித்த கவிதைகளை நான் பார்த்திருக்கிறேன்; படித்துமிருக்கிறேன் என்பதற்காக மட்டுமல்ல நான் பாரதிதாசன் படத்தைத் திறந்துவைக்கப் பிரியப்படுவது. புரட்சிக் கவியும் நானும் ஒரே இனம்; ஒரே இனக்கொள்கை உடையவர்கள். பொதுமக்கள், துர்ப்பாக்கியவசமாக அவர் நாட்டுக்கு ஆற்றுகின்ற தொண்டைப் பற்றி நினைக்காவிட்டாலும், ஒரு சிறு நன்றியாவது செலுத்தாவிட்டாலும், பல மாணவர்களின் உள்ளங்களிலே. பாரதிதாசன்மேல் அன்பு ஊடுருவிப் பாய்ந்து அவருக்கு