பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

இன்றைய நிலைமை

தொன்மையான தமிழ்ப் பெரு மக்களின் தாயகம் இன்று ஒரே ராஜ்யத்தில் ஒரு கல்லில் செதுக்கப்பட்டதாக, ஒன்றாக இல்லை; துண்டு துண்டாகக் கூறு போடப்பட்டிருக்கிறது. ஆந்திர ராஜ்யம் பிரிந்த பிறகு சென்னை ராஜ்யத்தில் 14 ஜில்லாக்களில் 12 ஜில்லாக்கள் தமிழ் ஜில்லாக்கள். புதிய ஆந்திர ராஜ்யத்தில் சித்தூர் ஜில்லாவின் தெற்கெல்லையை அடுத்துள்ள பிரதேசத்தில் சின்னஞ் சிறிய தமிழகத் துண்டுகள் கிடக்கின்றன. திரு-கொச்சி ராஜ்யத்திலும் பிரெஞ்சிந்தியாவிலும் நமது அருமைத் தமிழகத்தின் கூறுகள் கிடக்கின்றன. தமிழனுக்குத் தமிழரசு இல்லை.

“நீலத் திரைகட லோரத்திலே நின்று
நித்தம் தவம்செய் குமரி”

வாழும் திருவிதாங்கூர் தமிழகத்திலுள்ள தமிழர்கள், தாய்த் தமிழகத்துடன் இணைந்து வாழத் துடியாய்த் துடிக்கின்றனர். அரசாங்க நிர்வாகம், சட்ட சபை நீதிமன்றம், கல்வி கலைத்துறை ஆகியவற்றில் திரு-கொச்சி ராஜ்யத்தில் தமிழுக்கு மதிப்பில்லை. தங்கள் தாய் மொழிக்கு உரித்தான இடமில்லாத சாபத் தீடால் அங்குள்ள லட்சக்கணக்கான சாதாரண தமிழ் மக்கள், சர்க்கார் அலுவலகங்களிலும், போலீஸ், கல்வி இலாகா, நீதிமன்றம் முதலியவைகளிலும் மலையாள மொழிபோல், தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அந்தஸ்து இல்லாத கொடுமையால் பலப்பல இன்னல்களுக்கிரையாகித் தவிக்கின்றனர். இதன் விளைவாக தமிழ், தமிழர், தமிழ் நாடு என்ற உணர்ச்சி, அங்கு சர்வ வியாபக உணர்ச்சியாக விளங்குகிறது. ஐக்ய தமிழக கோஷத்தின் கீழ், திரு-தமிழகம்தான் முன்னணியில் முதல் வரிசையில் நிற்கிறது.

ஐக்ய தமிழக கோஷத்தை முன் வைத்து 1948-ல் நடந்த பொதுத் தேர்தலில் போட்டி போட்ட திரு-த-நா-காங்கிரஸ், தம் பான் ஆட்சியின் கொடிய போலீஸ் அடக்குமுறையையும், சமஸ்தான காங்கிரஸின் அரசியல் சூதுவாதுகளையும் முறியடித்துக் கொண்டு, நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றது. தென்திருவிதாங்கூரிலுள்ள, கல்குளம், விளவங்கோடு போன்ற பின் தங்கியுள்ள தாலுகாக்களிலுள்ள தமிழ் மக்களுக்குக்கூட ஐக்ய தமிழகம் தான் உயிர்.

திரு-தமிழகத்தில், ‘தாய்த் தமிழகத்தோடு இணையவேண்டும்’ என்ற கோரிக்கைக்கே முதல் தாம்பூலம். இந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தில் அங்குள்ள தமிழ் மக்கள் வீறு கொண்டு நிற்கிறார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐக்கிய_தமிழகம்.pdf/6&oldid=1511463" இலிருந்து மீள்விக்கப்பட்டது