பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

105


தெளிவுரை : பகற்காலத்தின் ஒளியைக்கொள்ளும் விளக்குகளாலே, இரவுக் காலத்தின் உண்மையே தெரியாதபடி ஒளியோடும் விளங்குவது, வெல்லுகின்ற போராற்றலிலே மிகுந்த சோழர்களுக்குரிய ஆமூர். அதனைப் போலும் ஒளியுடைய, இவளது அழகுபெற்ற ஒளிசுடரும் நெற்றியானது, இப்போதிலே பசலையால் தன் ஒளிகெட்டது. அவளைத் தேற்றும் பொருட்டாக நீ சொல்லும் வாய்மையற்ற சொற்கள், இனி என்ன பயனைத்தான் செய்யுமோ?

கருத்து: 'பொய்யான இந்தத் தேறுதல் உரைகளாலே மட்டும் பயனில்லை' என்றதாம்.

சொற்பொருள்: பகல் கொள் விளக்கு - ஒளிமிக்கவும் பலவாகப் பெருகியவமான விளக்குகளாலே, இரவின் இருள் முற்றமறைந்து, இரவே பகலின் ஒளியைப்பெற்றுப் பகலேபோல விளங்கிற்று என்பதாம்; 'பகல் கொல் விளக்கு' என்பதும் பாடம். இராநாள் - இரவுக்காலம். ஆமூர் - சோழர்க்குரியதோர் பேரூர்; 'இன்கடும் கள்ளின் ஆமூர்' எனப் புறநானூறும் (புறம். 80); அந்தண் கிடங்கின் ஆமூர்' எனச் சிறுபாணும் இதனைக் காட்டும் (சிறுபாண் 188). தேம்ப - அழகழிந்து வருந்த. பயம் - பயன். தேற்றிய மொழி - தேற்றிக் கூறிய உறுதிச் சொற்கள்.

விளக்கம் : தேறுதல் உரைகள் பயன் செய்யாமை, முன்னும் பலகால் உறுதிகூறித் தேற்றிப், பின்னர் சொற்பிழைத்து ஒழுகித் தலைவிக்கு வருத்தம் செய்தவன் தலைவன் என்பதனாலே. 'ஆமூர்' இரவிலும் விளக்கொளிகள் இரவையோட்டிப் பகலாகச் செய்ய, ஆரவாரத்துடன் விளங்கும் செல்வவளமையுடையது என்பதாம். அஃதாவது என்றும் குன்றா வளமை; அத்தகு எழில்குன்றாத் தலைவியின் சுடர் நுதலின் ஒளியும் நின்னாலே இப்போது ஒளியற்றுக் கெட்டது என்கின்றனள். ’எவன் பயன் செய்யும்?’ என்றது, ’இனியும் நின் பேச்சை வாய்ம்மை எனக்கொள்ளும் மயக்கத்தேம் யாமல்லோம்' என்று இடித்துரைத்ததாம்.

உண்மையிலேயே இரவுநேரத்திலே இருள்தான் உளதான போதிலும், அதனை மக்கள் ஒளிவிளக்குகள் பலவாக அமைத்தலாலே மாற்றிக் கொள்ளலைப்போல, பரத்தைமையாகிய புறத்தொழுக்கம் கொண்ட தவைனும், தன் ஒளியான சொற்களாலே அதனைப் பொய்யாக்கிக் காட்டுவதற்கு முயல்கின்றான் என்பதுமாம்.