பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



110

ஐங்குறுநூறு தெளிவுரை


 கருத்து : 'நீதான் அன்புடையார் பேச்சிற்கு அகம் நிலைகொள்ளும் மனநிலை இழந்தனை' என்பதாம்.

சொற்பொருள் : கேட்டிசின் - கேட்பாயாக; சின், முன்னிலை அசை. ஆற்று உற - ஆறுதல் அடைய. நோம் - வாடுதும்.

விளக்கம் : முன்னர்த் தலைவனின் காமநோய்க்குத் தோழி மருந்தாகியது, களவுக்காலத்தே. அன்று என் பேச்சால் தலைவி நினக்கு மகிழ்ச்சி தந்தனள்; இன்று நீயோ அவளை ஒதுக்கியதுடன் என் பேச்சையும் ஏற்றுக் கேளாயாயினை என்று தோழி குறைப்படுகின்றாள்.

மேற்கோள் : பரத்தையர் மனைக்கண் தங்கி வந்திருந்த தலைமகனை நெருங்கித் தலையளிக்குமாறு கூறித், தலைமகள் மாட்டாக்கிக் கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழும் என இளம்பூரணரும், நச்சினுர்க்கினியரும் எடுத்துக்காட்டுவர் - (தொல். கற்பு‌. 9).

60. வேல் அஞ்சாயோ?

துறை : வரையாது ஒழுகும் தலைமகன் இரவுக்குறி வந்துழித் தோழி சொல்லியது.

[து. வி. : சூளுரைத்தபடி தலைமகளை வரைந்து வராமல், அவள உறவை விரும்பிமட்டும் ஒருநாள் இரவு தலைமகன் வருகின்றான். இரவுக் குறியிடத்தே. அவனைச் சந்தித்த தோழி சொல்லியதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]


பழனக் கம்புள் பயிர்ப்பெடை அகவும்
கழனி யூர! நின் மொழிவல்! என்றும்
துஞ்சுமனை நெடுநகர் வருதி;

அஞ்சாயோ, இவள் தந்தைகை வேலே?

தெளிவுரை : பழனங்களிலே வாழ்கின்ற, சதா ஒலி செய்தபடியிருக்கும் சம்பங்தோழியானது, பிரிந்து சென்றுள்ள தன் சேவலைத் தன்னருகே வருமாறு கூவிக்கூவி அழைக்கும் கழனிகளையுடைய ஊரனே! உள்ளிருப்பார் அனைவரும் அயர்ந்துறங்கும் பெருமனையிடித்தே, இரவு நேரத்தே, அஞ்சாமல் துணிந்து வருகின்றனையே! இவள் தந்தையின் கையில் உள்ள வேலுக்கு நீதான் அஞ்சமாட்டாயோ?