பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

112


ஆழ்ந்த நீரையுடைய பொய்கையிடத்தே, 'துடும்' என்னும் ஓசையுடன் விழுகின்ற, கொடை வண்மையுடைய மத்தியின், 'கழாஅர்' என்னும் ஊரைப்போன்ற, நல்ல பெண்களையே நாடிச் சென்று, நீயும் வதுவை செய்துகொள்ள விரும்புகின்றாய்!

கருத்து: ஆகவே, 'என்னிடத்து நீ அன்பற்றாய்; ஆதலின் விலகிப்போக' என்றதாம்.

சொற்பொருள்: நறுவடி - நறுமணமுள்ள மாவடுக்கள்; வடுக்கள் - பிஞ்சுகள்; 'நறுவடிமா' என்று நற்றிணையும் கூறும் - (நற். 243). நெடுநீர்ப் பொய்கை - நிறைந்த நீர் நிலையாக இருத்தலைடைய பொய்கை. 'மத்தி' என்பவன் கழாஅவர்க்கு உரியனாயிருந்து ஒரு வள்ளல். 'கழார்' சோணாட்டில் ஓர் கடற்கரைப்பேரூர்; இவ்வூர்ப் புலவர் கழாஅர்க் கீரன் எயிற்றியார். வதுவை - மணம். பரத்தையோடு முதல்தொடர்பு கொள்வார் அதனையே வதுவைபோலக் கொண்டாடுதல் என்பதும் மரபு. 'வதுவை அயர்ந்தனை என்ப' என, அகநானூற்றும் இவ்வாறு வரும்- (அகம். 36.).

விளக்கம்: நீர் வற்றாதிருக்கும் பொய்கைக் கரையிலேயுள்ள மாமரத்தின், மரத்திலேயே முதிர்ந்து கனிந்த அதன் பழம், துடுமென்னும் ஒலியோடே நீரில் விழும் என்றது, கழாஅரின் வளமைபற்றிக் கூறியதாம். நல்லோர் நல்லோர் என்று பரத்தையரைக் குறிப்பிட்டதும், அவரோடு அவன் வதுவை அயர்ந்தான் என்றதும், தன்னுளத்தே தோன்றிய எள்ளல் புலப்படக் கூறியதாம்.

உள்ளுறை: மாவின் முதிர்ந்த கனி தானாகவே குளத்து நீரில் துடுமென விழூஉம் என்றது. அவ்வாறே பரத்தையர் சேரியிலே பக்குவமான இளங்கன்னியர் தலைவனின் வலையிலே தாமாகவே வந்து ஆரவாரத்துடன் விழுவாராயினர் என்று, உள்ளுறையால், அவன் புறத்து ஒழுக்கம் சேரிப்பெண்டிரெல்லாரும் அறிந்ததாயிற்றென்று கூறினளாம்.

இல்லறமாற்றி இன்புற்றிருந்த தலைவன், அப்பிடிப்பினின்றும் விலகிப் பரத்தையர் வலையிலே போய் வீழ்ந்தான் என்பது, மாவின் நறுங்கனி பொய்கைக்கண் வீழ்ந்து அழிவது போலாகும் என்று உள்ளுறை கொள்வதும் பொருந்தும். மாங்கனி பயனின்றி நீரிலே துடுமென வீழ்தலே போலத், தலைவனும் ஆரவாரத்துடன் வதுவைமேவிப் பரத்தையருடன் திரிவான் என்பதும் ஆம்.

ஐங். - 8