பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



114

ஐங்குறுநூறு தெளிவுரை


62. எவ்வூர் நின்றது தேர்?

துறை: மேற் செய்யுளின் துறையே.

இந்திர விழவிற் பூவின் அன்ன
புன்றலைப் பேடை வரிநிழல் அகவும்
இவ்வூர் மங்கையர்த் தொகுத்து, இனி

எவ்வூர் நின்றன்று - மகிழ்ந! - நின் தேரே!

தெளிவுரை: மகிழ்நனே! இந்த விழவினிடத்தே கலந்து மகிழ வருவார் பலரும் சூடியிருக்கும், வேறுவேறு வகையான பூக்களைப்போன்ற அழகுடைய, இவ்வூர்ப் பரத்தையரை எல்லாம் ஓரிடத்தே கொண்டு தொகுத்ததன் பின்னால், புல்லிய குயிற்பேடையானது வரிப்பட்ட நிழற்கண் இருந்து அகவும் இவ்வூரைவிட்டு, வேற்றூர் மகளிரையும் கொணர்தலின் பொருட்டுச் சென்று, இப்போது நின் தேர் எவ்வூரிடத்தே நிற்கின்றதோ?

கருத்து: 'நின் பரத்தையர் உறவுதான் வரை கடந்ததாயிற்று' என்பதாம்.

சொற்பொருள்: இந்திர விழா - மருத நிலத்தார் இந்திரனுக்கு எடுக்கும் பெருவிழா. புன்றலை - புல்லிய தலை. பேடை - குயிற் பேடை; இளவேனிற் காலத்தே ஓயாது அகவும் இயல்பினது.

விளக்கம்: 'நின் தேர் எவ்வூர் நின்றன்று?" என்றது. நீதான் இவ்வூர்ப்பரத்தையரை எல்லாம் நுகர்ந்து முடிந்தபின் இப்போது எவ்வூரவளோடு போய்த் தொடர்புடையையோ என்றதாம்; பரத்தமை பூண்டாரின் மனவியல்பு இவ்வாறு ஒன்றுவிட்டொன்றாகப் பற்றித் திரிந்து களிக்க நினைப்பதாகும். இந்திரவிழா, அரசு ஆதரவில் நடக்கும் பெருவிழா என்பதைச் சிலப்பதிகாரம் காட்டும்; அவ்விழாக் காணவருவார், வேற்றூர் மகளிரும் ஆடவரும் பலராயிருப்பர் என்பதால், 'இந்திரவிழவிற் பூவின் அன்ன' என்று, அவர் சூடிய பலப்பல பூவகைகளையும் குறித்தனர். பல பூக்கள் என்றது, அவரவர் நிலத்தன்மைக்கு ஏற்பப் பூச்சூடும் மரபினையும் குறித்ததாம். அவ்விழவில் நடனமாடவரும் பலவூர்ப் பரத்தையரின் ஒப்பனைகளை இது சுட்டுவதும் ஆகலாம்.

'இவ்வூர் மங்கையர்த் தொகுத்து' என்பது, இந்திரவிழவில் ஆடலும் பாடலும் நிகழ்த்தற்பொருட்டு, ஊர்த்தலைவனான