பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



116

ஐங்குறுநூறு தெளிவுரை



தொகை கூறுவதாலும் அறியலாம் - (குறுந். 364). 'எந்நலம் தொலைவது ஆயினும்' என்றது, அவன் உரிமை மனையாளாதலின், அவள் அழகெல்லாம் அழிவதுபற்றி ஏதும் கவலைப்படுதலும் இல்லை என்று கூறியதாம். களவுக்காலத்தே தம் நலம் பெரிது பேணும் மகளிர், ஒருவனின் உரிமை மனைவியராயினபின் அதன்பாற் பெரிதும் கருத்துக் காட்டார்; கடமையே பெரிதாக நினைப்பர் என்பதும், இதனாற் கொள்ளப்படும்.

உள்ளுறை: 'நீர்நாய் அன்றன்றைக்கான இரைதேடிச் சென்று வாளைமீனைப் பற்றியுண்டல்போல, ஊரனாகிய நீயும், அன்றன்றைக்கு எழும் நின் ஆசை தீரும்பொருட்டுப் புதிய புதிய பரத்தையரைத் தேடிச்சென்று துய்த்து மகிழும் இயல்பினை' என்று, பழித்து ஒதுக்கினள் என்க.

மேற்கோள்: "இது பிறப்பு உவமப் போலி; நல்ல குலத்திற் பிறந்தும், இழிந்தாரைத் தேடிப்போய்த் தோய்ந்தமையான் அவர் நாற்றமே நாறியது; அவரையே பாதுகாவாய்; மேற்குலத்துப் பிறந்த எம்மைத் தீண்டல்' என்பாள், அஃது எல்லாம் விளங்கக் கூறாது. 'பொய்கைப் பள்ளிப் பிறந்த நீர்நாய் முன்னாள் தின்ற வாளைமீன் புலவு நாற்றத்தோடும், பின்னாளும் அதனையே வேண்டும் ஊரன் என்றமையின், பரத்தையர் பிறப்பு இழிந்தமையும், தலைவி பிறப்பு உயர்ந்தமையும் கூறி, அவன் பிறப்பின் உயர்வும் கூறினமையின், இது பிறப்புவமப் போலியாயிற்று. இவையெல்லாம் கருதிக் கூறின், செய்யுட்குச் சிறப்பாம் எனவும், 'வாளாது நீர்நாய் வாளை பெறூஉம் ஊர' என்றதனான் ஒரு பயனின்று எனவும் கொள்க என்பர் பேராசிரியர் - (தொல். உவம. 25).

இவ் விளக்கத்தால், 'புலவுநாறு' என்பதற்கு, முதல்நாள் கூடிய பரத்தையின் சுவடு கலையாமலே என்றும், 'நாள் இரை' என்றற்கு, அன்றைக்கு அவளைவிட்டு மற்றொருத்தியை நாடி என்றும், குறிப்புப் பொருள் கொள்ளலாம்.

64. எம்மை மறையாதே!

துறை : தலைமகன் பரத்தையரோடு புனலாடினான் என்பது அறிந்த தலைமகள், அவன் மறைத்துழிச் சொல்லியது.

[து. வி.: தலைவன் பரத்தையரோடு புதுப்புனலாடி மகிழ்ந்தான் என்று கேட்டதும், தலைவியின் நெஞ்சம் கொதிப்புற்று