பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



10

நெடுஞ்செழியனோடும் போரிட்டு, அதனால் சோழபாண்டிய அரசர்களின் பகைமைக்கு உள்ளானபோதும், தாய்த்தமிழின் செவ்விபேண நினைத்தபோது, பாண்டியன் ஆதிக்கத்திலிருந்த மதுரைச் சங்கத்தாருடனும், சோணாட்டாரான பெருங் கோழியூர்க் கிழாரோடும் மனங்கலந்து நெருக்கமான உறவு கொண்டவன். தமிழ் மேன்மை அந்நாளைய தமிழகத்துத் தலைவர்கள்பால் எந்த அளவுக்கு வேரூன்றி நின்றதென்பதையும், அது பிறபிற உறவு வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி நின்று உயர்ந்திருந்ததென்பதையும், இதனால் நாம் உணரலாம்.

தண்பொதியச் செந்தேனய் இனிக்கும் சிலப்பதிகாரக் காப்பியத்திலும், இவனைப் பற்றிய செய்திகள் சில, கட்டுரை காதையுள் கூறப்பட்டுள்ளன.

'வண்தமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த

திண்திறல் நெடுவேற் சேரலன்'

என்னும் இவனைக் காணற்பொருட்டுச் சோணாட்டிலிருந்து சென்றவன் பராசரன் என்பான் ஆவான். இவன் வடமொழியிலே மிகவும் வல்லமை பெற்றவன். இவன் இம்மாந்தரனின் அவைக்கண்ணே சென்று, தன் வடமொழிப் புலமையை அங்கிருந்த மன்னனும் வடமொழிவாணரும் வியக்க எடுத்துக் காட்டினன். இதனை,

’நாவலம் கொண்டு நண்ணுர் ஒட்டிப்
பார்ப்பன வாகை சூடி ஏற்புற

நன்கலம் கொண்டு’

இவன் மீண்டதாகச் சிலம்பு கூறுகின்றது. இதனால், செழுந்தமிழ் சிறந்தோங்கிய அந்நாளிலேயே, வடமொழிப் புலமை யினும் விஞ்சிநின்றவர் பலர் தமிழகத்தே வாழ்ந்தமையும், அவர்தம் புலமையை மதிப்பீடுசெய்து பரிசளிக்கும் அளவிற்கு இம் மாந்தரஞ்சேரல் அம்மொழிப் புலமையும், தன்மொழிப் புலமையோடு பெற்றுத் திகழ்ந்தமையும் நாம் அறியலாம். பராசரன் இவனுடைய அன்பான அளவுக்கு மிஞ்சிய உபசாரங்களாலும், இவன் அளித்த அளவிலாப் பெரும் பரிசில்களாலும்,