பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

119


கூறிக் காட்டற்காம். கரும்பு நடு பாத்தியில் ஆம்பல் கலித்தாற் போலத், தானிருந்து இல்லறமாற்றற்குரிய வளமனையில், தலைவள் பரத்தையைக் கொணர்ந்து கூடியிருந்தான் என்று கேட்ட செய்தியால் மனமிடிந்து, தலைவி கூறியதாகவும் கொள்க. பெரும்பாலும் தமிழினமரபு முதற் பிள்ளைப்பேறு தாய்மனைக்கண்ணே நிகழ்வதே ஆதலின், தலைவன், இவ்வாறு பரத்தையைத் தன் வீட்டிடத்தேயே கொணர்ந்து கூடியிருத்தலும் நிகழக்கூடியதே யாகும்.

மேற்கோள்: இது வினையுவமப்போலி; என்னை? தாமரையினை விளைப்பதற்கன்றிக் கரும்பு நடுதற்குச் செய்த பாத்தியுள் தானே விளைந்த தாமரை, சுரும்பின் பசி தீர்க்கும் ஊரன் என்றாள். இதன் கருத்து: அது காதற் பரத்தையர்க்கும் இற்பரத்தையர்க்கும் என்று அமைக்கப்பட்ட கோயிலுள் யாமும் உளமாகி, இல்லறம் பூண்டு விருந்து ஓம்புகின்றனம்; அதுபோல என்பதாகலான், உவமைக்குப் பிரிதொரு பொருள் எதிர்த்து உவமம் செய்யாது, ஆண்டுப் பிறந்தனவற்றோடு நோக்கிக் கருத்தினாற் கொள்ள வைத்தலின், இஃது உள்ளுறை உவமம் ஆயிற்று. அவற்றுள்ளும், இது சுரும்பு பசி களையும் தொழிலோடு, விருந்தோம்புதல் தொழில் உவமங்கொள்ள நின்றமையின், வினையுவமப்போலியாயிற்று. இங்ஙனம் கூறவே, இதனை இப் பொருண்மைத்து என்பதெல்லாம் உணருமாறு என்னை? எனின், முன்னர், 'துணிவோடு வரூஉம் துணிவினோர் கொளினே' எனல் வேண்டியது. இதன் அருமை நோக்கியன்றே என்பது. அல்லாக்கால், கரும்புநடு பாத்திக் கலித்த தாமரை, சுரும்பு பசி களையும் பெரும்புனல் ஊர என்பது பயமிலவென்பது கூறலாம் என்பது' என, இச் செய்யுளை, நன்கு விளக்குவர் பேராசிரியர் - (தொல். உவமம். 25.)

புதல்வன் தோன்றிய நெய்யணி நயந்த கிழவனை, நெஞ்சு புண்ணூறுமாறு பண்ணிச் செறிவுநீக்கிய இளிவந்த நிலையின் கண், தலைவிக்குக் கூற்று நிகழும் எனக் காட்டுவர், இளம்பூரணர் - (தொல். கற்பு. 6).

புதல்வற் பயந்து காலத்துப் பிரிவுபற்றித் தலைவி கூறியது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 6).

பரத்தையினது இல்லிலிருந்து தலைவனது வரவைப் பாங்கிகூற, அதையுணர்ந்த தலைவி, தலைவனோடு புலந்தது எனக் காட்டுவர் நம்பியகப்பொருள் உரைகாரர் - (கற்பு. 7).