பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



122

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: 'அவள் நின்னைப்பற்றிய உண்மையினை அறியாள் போலும்' என்றதாம்.

சொற்பொருள்: மடவள் - மடமையுடையவள். இனி - இப்பொழுது. கொண்டோள் - தன்பாற் பிணித்துக்கொண்டவள். நிகரி - நிகராகக் கருதி மாறுபட்டு. தருக்கும் - செருக்குக் கொள்ளும். விரிமலர் - மொட்டவிழ்ந்த புதுமலர்.

விளக்கம்: 'தலைவனின் காதற்பரத்தை, தலைவியோடு தன்னையும் ஒருசேரக் கருதினளாக ஒப்பிட்டுக்கொண்டு, தான் தலைவியினும் பலவாகச் சிறந்தவள் என்றும் கூறினாள்' எனக் கேட்டுப் புலந்திருந்தவள் தலைவி. தலைமகன் தன்னை நாடிவந்தபோது, அப் பரத்தையின் தோழியர் கேட்பத் தலைவனுக்குச் சொல்வதுபோல இப்படிக் கூறுகின்றாள். தன்னை இழிந்தாளான பரத்தை ஒருத்தி பழித்தற்குக் காரணமாயினவன் தலைவனே என்று, அவன் செயலைப் பழித்ததும் ஆம். 'அவளையும் தலைவன் விரைவிற் கைவிட்டு வேறொருத்தியை நாடுவான்' என்று, அவன் நிலைமைகூறிப் பரத்தையின் செருக்கழிதற்கு உண்மையுணர்த்திக் காட்டியதுமாம்.

'விரிமலர்த் தாதுண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே' என்பதற்கு, 'அவளைத் தழுவியின்புற்றுப் பிரிந்துபோயின ஆடவரும் மிகப்பலராவர்' என்று பொருள் காணலும் பொருந்தும்; தன் கற்புச்சால்பும் பரத்தையின் இழிவும் கூறியதாகவும் அது அமையும்.

உள்ளுறை : வண்டொன்று பலப்பல மலரினும் சென்று சென்று தேனுண்டு, பின் அப்பூக்களை நாடாது வாடியுதிரவிட்டுக் கழித்தல்போலத், தலைவனும் புதியரான பரத்தையரை நாடிச்சென்று கூடி இன்புற்று, அவரைக் கைவிட்டுவிடும் இயல்பினன், என்று உவமைப்படுத்தினள்.

மேற்கோள்: காமக்கிழத்தியர் நலம்பாராட்டிய தீமையின் முடிக்கும் பொருளின்கண், தலைவி கூற்று நிகழும். இதனுள் இப்பொழுது கிடையாதது கிடைத்தாக வரைந்துகொண்ட பரத்தை, தன்னொடு இளமைச்செவ்வி ஒவ்வா என்னையும் தன்னொடு ஒப்பித்துத், தன் பெரிய நலத்தாலே மாறுபடும் என்பவென, அவள் நலத்தைப் பாராட்டியவாறும், நீ பசப்பித்தோர் வண்டு தாதுண்ட மலரினும் பலரெனத் தீமையின் முடித்தவாறும் காண்க என, இச்செய்யுளைக் கற்பியற் சூத்திர உரையிற் காட்டிப் பொருள்விளக்கம் தருவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 6). இதனையும் நினைந்து பொருள்

கொண்டு மகிழ்க.