பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

125


பெருந்துறை - பலரும் சேர்ந்து நீராடியபடி இருக்கும் பெரிய நீர்த்துறை.

விளக்கம்: பலராடு பெருந்துறையிலே, வண்டல் இழைத்திருந்த பெண், அது நீரால் அடித்துப் போகப்பட அதுகுறித்து உண்கண் சிவப்ப அழுதாள் என்பது, அவளது அறிய இளமைப்பருவத்தினைக் காட்டிக் கூறியதாம். மணல் வீடு அழிதற்கே அவ்வாறு தாங்காதே அழுதவள், நீ மறந்து கைவிட்டால் தாங்குவதிலள்; அதனால் நீயும் 'அவளிடமே செல்வாயாக என்று புலந்து ஒதுக்கியதுமாம். 'கண்டனெம்' என்றது' முன் நேரிற் கண்டதனை நினைவுபடுத்தியது.

மேற்கோள் : காமஞ்சாலா இளமையோளைக் களவின்கண் மணந்தமை அறிந்தேன் எனத் தலைமானை நோக்கித் தலைவி கூறியது இது எனக் கற்பியலிற் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். கற்பு. 6).

70. யாம் பேய் அனையம்!

துறை: பரத்தையரோடு பொழுது போக்கி, நெடிது துய்த்துவந்த தலைமகனோடு, தலைமகள் புலந்து சொல்லியது.

[து. வி.: பரத்தையரோடு நெடுநேரம் கலந்திருந்து களித்தபின், தன் வீடு திரும்புகின்றான் தலைவன். அவனிடம், அத் தகவல் அறிந்தாளான தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]

பழனப் பன்மீன் அருந்த நாரை
கழனி மருதின் சென்னிச் சேக்கும்
மாநீர்ப் பொய்கை யாணர் ஊர!
தூயர்; நறியர் - நின் பெண்டிர்;

பேஎய் அனையம், யாம் : சேய் பயந்தனமே!

தெளிவுரை : பழனத்தேயுள்ள பலவான கழனியிடத்தேயுள்ள மீன்களையும்

பற்றியுண்ட நாரையானது மருதமரத்தின் உச்சியிலே சென்று தங்குகின்ற, மிக்க நீர்நிறைந்த பொய்கையினையும், புதுவருவாய்ப் பெருக்கினையும் கொண்ட ஊரனே! யாம் சேயினைப் பெற்றுள்ளேமாதலின், நின் பார்வைக்குப் பேயினைப் போன்றவரே யாவோம்; நின் பெண்டிரான பரத்தையரோ தூய்மையும் நறுமணமும் உடையராவர்!