பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



128

ஐங்குறுநூறு தெளிவுரை


எழுந்த பெரும் பழியினையும், நின் மாயப் பேச்சுக்களாலே நின்னால் மறைத்தற்கு இயலுமோ?

கருத்து: 'நின் பொய்யுரை வேண்டா! யாம் உண்மை அறிவேம்' என்றதாம்.

சொற்பொருள்: சூதார் குறுந்தொடி - உள்ளே துளையுடையதாகச் செய்யப்பெற்ற குறுந்தொடி;சூதான சிந்தையோடு ஒலிக்கும் குறுந்தொடிகளும் ஆம். சூர் - அச்சம். சூர் அமை நுடக்கம் - துவண்டு நடக்கும் நடையழகால் ஆடவரைத் தம் வலைப்படுத்து அழித்தலால், இவ்வாறு அச்சம் அமைந்த அசைவு என்றனர். புதைத்தல் - மூடி மறைத்தல்.

விளக்கம்: ஞாயிற்றின் ஒளியை எவராலுமே மறைக்க வியலாதே போல, அதுதான் எங்கும் பரவி நிறைவதேபோல, நீ பரத்தையருடனே புனலாடினதால் எழுந்த பழிப்பேச்சும் எவராலும் மறைத்தற்கியலாததாய் எங்கும் பரவிப் பெரும்பழி ஆயிற்றும் அதனை நின் மாயப்பேச்சால் மறைத்து மாற்ற வியலாது என்கிறாள் தலைவி. 'ஞாயிற்று ஒளியை மறைத்தல் ஒல்லுமோ?' என்றது. நீ கலந்து புன்லாடினையாதலின், நின்னை ஊரவர் யாவரும் அறிவாராதலின், அதனை நின்னால் மூடி மறைக்க இயலாது என்றதும் ஆம். அலர் அஞ்சியேனும் அவன் அவ்வாறு நடந்திருக்க வேண்டாம் என்பது அவள் சொல்வது; இது, அவன் புறத்தொழுக்கத்தோடு, ஊரறிந்த பழிப்பேச்சும் உள்ளத்தை வருத்தக் கூறியதாம்.

72. எமக்குப் புணர்துணை ஆயினள்!

துறை : தலைமகள் புலவிநீக்கித் தன்னோடு புதுப்புனல் ஆடவேண்டிய தலைமகன், களவுக்காலத்துப் புனலாட்டு நிகழ்ந்ததனை அவள் கேட்பத் தோழிக்குச் சொல்லியது.

[து.வி. தலைவன் பரத்தையரோடு புனலாடினான் எனக் கேட்டு. அவனுடன் ஊடியிருந்தாள் தலைவி. தலைவன் அஃதறிந்து வந்து, அவளைத் தன்னோடு புனலாட வருமாறு அழைக்க, அவள் மறுக்கின்றாள். அப்போது அவன், தோழிக்குச் சொல்வதுபோல, தலைவியும் கேட்டு மனங்கொள்ளுமாறு. முன்னர்க் களவுக்காலத்தே, தான் அவளோடு புதுப்புனல் ஆடியதுபற்றிக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]