பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



132

ஐங்குறுநூறு தெளிவுரை


மேற்கோள்: தலைவி புலவி நீங்கித் தன்னொடு புனலாடல் வேண்டிய தலைவன், முன் புனலாடியதனை, அவள் கேட்பத்தோழிக்கு உரைத்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 50).

75. இவண் பலர் ஒவ்வாய்!

துறை: பரத்தையோடு புனலாடிவந்த தலைமகன், அதனை மறைத்து கூறியவழித் தோழி கூறியது.

[து. வி.: பரத்தையோடு புனலாடினான் தலைவன் என்பது கேட்டுத் தலைமகள் புலந்திருக்கின்றாள். அதனை உணர்ந்த தலைவன், அவ்வாறு அவர்கள் நினைப்பது பொய்யானது என்று கூறுகின்றான். அப்போது தோழி, அவனுக்குச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

பலரிவண் ஒவ்வாய், மகிழ்ந! அதனால்,
அலர் தொடங்கின்றால் ஊரே; மலர
தொன்னிலை மருதத்துப் பெருந்துறை,

நின்னோ டாடினள். தண்புன லதுவே.

தெளிவுரை: மகிழ்நனே! மலர்களைக் கொண்டவும், பழமையான நிலைமைத்தாகியவுமான மருதமரங்கள் நிறைந்த பெருந்துறையினிடத்தே, ஒருத்தி நின்னோடும்கூடிக் குளிர்ந்த புதுப்புனலிலே புனலாட்டயர்ந்தனள். அதனாலே அவளையும் நின்னையும் சேர்த்து ஊரிடத்தே அலர் எழுதலும் தொடங்கிவிட்டது. ஆகவே, இவ்வூர் ஆடவர் பலருடனும், நீதான் நின் புறத்தொழுக்கத்தாலே தாழ்வுற்று, அவர்க்கு ஒவ்வாதாய் ஆயினை - அஃதாவது பழியுடையாய் ஆயினை!

கருத்து: 'ஆதலின் நின்னுடன் புனலாடத் தலைவி வருதல் இலள்' என்றதாம்.

சொற்பொருள்: பலர் - பலரான ஆடவர். ஒவ்வாய் - ஒப்பாகாய்; அவரெல்லாம் தத்தம் மனைவியரையன்றி, நின்போற் காமத்தால் அறியாமைப்பட்டுப் பரத்தையருடன் ஆடி மகிழும் பண்பற்றவர் அல்லராதலின், பின் மறுத்துப் பொய்யுரை பகர்வோரும் அல்லர். ஆகவே, நீ அவர்க்கு ஒப்பாகாய் என்றனள். தொன்னிலை மருதம் - நெடுங்காலமாகவே

ஆற்றங்கரையில் நின்று நிழல்செய்யும் மருதமரங்கள்.