பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. புலவி விராய பத்து

இத் தலைப்பின்கீழ் வருவன பத்துச் செய்யுட்களும் புலவி பொருளாகத் தலைவியும் தோழியும் பரத்தையும் கூறுவனவாக அமைந்துள்ளன. புலந்துகூறி வாயில் மறுத்தலும் இவற்றுட் காணப்படும். ஆகவே, புவவி விராய பத்து எனப்பெற்றது.

81. மனையோள் வருந்துவள்!

துறை : 'தன்னைக் கொடுமை கூறினாள் தலைமகள்' என்பது கேட்ட பரத்தை, தலைமகன் வந்து தன்மேல் அன்புடைமை கூறினானாக, அவட்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது.

[து. வி. : தன்னைப்பற்றித் தலைவி கொடுமை கூறினாள் என்று கேட்ட பாத்தைக்குத் தலைவியின்மீது சினம் உண்டாகின்றது. எனினும், தலைவியைப் போலத் தனக்கு உரிமைப் பிடிப்பு இல்லாததனையும் அவள் மறந்தாளில்லை, உள்ளம் பதறித் துடித்தவாறிருக்கின்றாள். அவ்வமயம் தலைவன் வந்து, அவள் முகம்கொடாமை கண்டு, அவள்பால் தான் கொண்டுள்ள அன்புடைமைபற்றிச் சொல்லி, அவளைத் தெளிவிக்க முயல்கின்றான். அப்போது, அவனுக்குச் சொல்வாள் போலத் தலைவியின் பாங்காயினாரும் கேட்டுணருமாறு, அப்பரத்தை சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

குருகுடைத் துண்ட வெள்ளகட் டியாமை
அரிப்பறை வினைஞர் அல்குமிசைக் கூட்டும்,
மலரணி வாயிற் பொய்கை யூர! நீ
என்னை 'நயந்தனென்' என்றி; நின்

மனையோள் கேட்கின், வருந்துவள் பெரிதே!

தெளிவுரை : குருகுகள் உடைத்து உண்டு கழித்த வெள்ளிய வயிற்றையுடைய யாமையது இறைச்சியினை, அரிப்பறையை முழக்கும் தொழிலுடையோரான உழவர்கள், தம் மிக்கஉணவோடு சேர்த்து உண்ணும், மலர்களால் அழகு பெற்ற நீர்த்துறைகளைக் கொண்ட, பொய்கைகள் விளங்கும் ஊரனே! நீதான் இங்கே வந்தனையாய், ’என்னையும்