பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

141


82. வெகுண்டனள் என்ப !

துறை: மனைவயிற் புகுந்த பாணற்குத் தலைமகன் கேட்கு மாற்றால் தலைமகள் சொல்லியது.

[து. வி.: பரத்தையுறவினனான தலைமகன், தன் பாணனோடும் தன் வீட்டிற்கு வருகின்றான். வந்தவன், ஆர்வத்தோடு தன் மனைவியை அணுக, அவள், பாணனுக்குக் கூறுவாள் போலத், தலைவனும் கேட்டுணருமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது. ]

வெகுண்டனள் என்ப, பாண! நின் தலைமகள்
"மகிழ்நன் மார்பின் அவிழிணர் நறுந்தார்த்
தாதுண் பறவை வந்து, எம்

போதார் கூந்தல் இருந்தன' வெனவே!

தெளிவுரை : பாணனே! மகிழ்நனது மார்பிடத்தேயுள்ள கட்டவிழ்ந்த பூங்கொத்துக்களோடும் கூடிய நறுமணமாலையிடத்தே மொய்த்துத் தேனுண்ட வண்டினம், எம்முடைய மலரணிந்த கூந்தலிலேயும் பின்னர் வந்து இருந்தன என்பதற்கே, நின் தலைவியாகிய பரத்தை வெகுண்டனள் என்று கூறுகின்றனரே!

கருத்து: 'அதற்கே வெகுள்பவள், தலைமகன் என்னைத் தழுவினனாயின் பொறுப்பாளோ?' என்றதாம்.

சொற்பொருள்: அவிழிணர் - இதழவிழ்ந்த மலர்க்கொத்து. நறுந்தார் - நறுமணம் கமழும் மாலை. தாதுண் பறவை - தேன் அருந்தும் வண்டினம். போதார் கூந்தல் - மலரணிந்த கூந்தல்.

விளக்கம்: மலர்தொறும் சென்று தேனுண்ணத் தாவும் வண்டினம் ஆதலின், அவன் மார்பிடத்துத் தாரில் மொய்த்தது தலைவியின் கூந்தலிற் சூடிய மலரிடத்தும் பின்னர்ச் சென்று மொய்த்தது எனக. இதனைக் கேட்கும் பரத்தை, அவர்கள் அத்துணை நெருங்கியிருந்தனர், அது தழுவல் குறித்ததே எனக்கொண்டு, தலைவன்மீது வெகுண்டாள் என்பதாம்.

'தாதுண் பறவை' போன்று, பெண்களை நாடித் திரிபவன் தலைவன்" என உட்பொருள் தோன்றக் கூறி, அவன் அப்பரத்தையையும் ஒருநாள் கைவிட்டு, இன்னொருத்திபாற் செல்வான் என்று சொன்னதும் ஆம்.