பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



146

ஐங்குறுநூறு தெளிவுரை


தனையோ?' என்றனளுமாம். 'கண்டோர் நகாரோ’ என்றது, ’ஊர் பழிக்கும் செயல் பரத்தமை' என்றும் சொல்லித், தாய் போல அறிவுத்தியதாம்.

'தாய்போற் கழறித் தழீஇக் கோடல் ஆய்மளைக் கிழத்திக்கு உரித்தென மொழிப' என்னும் கற்பியல் சூத்திரத்தின் விளக்கம்போல அமைந்தது இச் செய்யுளாகும் - (தொல். கற்பு. 32).

'நின் சிறுவரின்' என்பது பாடமாயின், 'அவன் புதல்வன், அழைக்கும் மாதரிடமெல்லாம் தாவிச்சென்று, அவர் அணைத்து முத்தமிடக் களிக்கும் அத் தன்மைபோல' என்றதாம். 'அவன் சிறுவன்; காமம் அறியான்; நீயும் அவ்வாறே செய்யின் நின் எண்ணத்தைக் குறித்து ஊர் பழியாதோ" என்றதாம்.

மேற்கோள்: இவ்வாறு கடிபவள், தலைவனை வெறுக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வாள் என்பதாம். மகனும் ஆற்றாமை வாயிலாகத் தலைமகன் வந்தபோது, தலைமகள் எதிர்கொண்டு சொல்லியது என்பர் நம்பியகப்பொருள் உரைகாரர்; அப்போது, புறம்போகப் புறப்பட்டவன் தன் மகனைக் கண்டதும், அவளை எடுத்தணைத்தவாறே மனைபுகத், தலைவி எதிர்கொண்டு சொல்வதாகக் கொள்க.

86. நின் மனையாளோடும் வாழ்க!

துறை: 'புதல்வன் கூறிய மாற்றம் தலைமகட்குப் பாங்காயினார் கூறக் கேட்டான்' என்பது அறிந்த பரத்தை, அதற்குப் புலந்து தலைமகற்குச் சொல்லியது.

[து. வி. : தன் புதல்வன் சொல்லிய செய்தியைத் தலைவியின் பாங்கியர் வந்து சொல்ல, அப்படியே கேட்டு நடந்தான் தலைவன், அவன்பால் பேரன்புடையவன் ஆதலால். இதனையறிந்த பரத்தை, 'நின் மகன்மேல் நின் அன்பு அத்தகையதாயின், நீ இனி நின் மனைவியோடேயே இன்புற்றனையாகி, நின் இல்லிடத்தே இருப்பாயாக; இவண் வாரற்க' என்று சொல்லி ஊடுகின்றனள் எனக் காட்டுவது இச் செய்யுள்.]

வெண்தலைக் குருகின் மென்பறை விளிக்குரல்
நீள்வயல் நண்ணி இமிழும் ஊர!
எம்மிவண் நல்குதல் அரிது!

நும்மனை மடந்தையொடு தலைப்பெய் தீமே.