பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



மருதம்

147


தெளிவுரை : வெண்மையான தலையையுடைய குருகினது மெல்லப் பறத்தலையுடைய பார்ப்புக்களின் கூப்பீடு குரலானது. நெடிய வயற்புறங்களையும் அடைந்து ஒலிக்கின்ற ஊரனே! இனி, நீதான் இவ்விடம் வந்து எமக்கு இன்பம் நல்குதல் என்பதும் அரிதாகும். நின் மனையிடத்தாளான மனையாட்டியோடும் கூடியிருந்து, அவளுக்கே என்றும் இன்பந்தந்தனையாய் வாழ்வாயாக!

கருத்து: 'நின் நினைவெல்லாம் நின் மகன் மீதே' என்றதாம்.

சொற்பொருள்: மென்பறை - பார்ப்புகள். விளிக்குரல் - அழைக்கும் குரல். இமிழும் - ஒலித்தபடி இருக்கும். 'மடந்தை' என்றது தலைவியை; அவள் மகப்பெற்று நலிவெய்தித் தன் அழகிழந்து முதுமையுற்றாள் என்றற்காம். நல்குதல் - இன்பம் தரல், தலைப்பெய்தல் - அருள் செய்தல்;கூடி மகிழல்.

விளக்கம்: 'குருகுப் பார்ப்புகள் தம் கூட்டிலேயிருந்தபடி கூவி அழைக்கும் குரலானது. வயலிடமெல்லாம் ஒலிக்கும்’ என்றது. அவ்வாறே நின் புதல்வனும் நின்னை அழைத்துக் கூப்பிடும் செய்தியானது, பரத்தையர் சேரிமுற்றவும் வந்து பரவுதலுற்றது' என்பதாம். ’அவனை மறக்கவியலாதவன் நீயாதலின், இனி இவண் வாராதிருக்க" என்கின்றாள். 'எம்’ என்று தன்னோடும் பிற பரத்தையரையும் உளப்படுத்திக் கூறினாள் எனலாம். 'நும் மனை' என்றது. அதனிடத்தே தமக்கேதும் உரிமையில்லை என்பதனையும், அது முற்றவும் தலைவிக்கே உரிமையுளதென்பதையும் நினைந்து கூறியதாம். 'குருகும் பார்ப்புக்குரல் கேட்டதும் பாசத்தோடு திரும்பிவரும்’ ஊரனாதலின், அவன் தன் மகன் பேச்சைக் கேட்டதும், பிறவற்றை மறந்து, அவன்பாற் செல்ல முந்துவானாயினான்’ என்றதாம்.

87. மனையோள் யாரையும் புலக்கும்!

துறை : 'தலைமகள் தன்னைப் புறங்கூறினாள்' எனக் கேட்ட காதற் பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்பத், தலைமகனோடு புலந்து சொல்லியது.

[து. வி.: தன்னைத் தலைமகள் பழித்தாள் என்று கேட்டாள். தலைமகனின் காதற் பரத்தை. தலைவன் அவளிடம் வந்தபோது, தலைமகளின் பாங்கியர் கேட்டுணருமாறு, அவள் தலைமகனோடு ஊடிப் பேசுவதாக அமைந்த செய்யுள் இது.]