பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

ஐங்குறுநூறு தெளிவுரை


பழித்துக் கூறினாள் என்று கேள்வியுற்றவள். அத் தலைமகட்குத் தோழியர் கேட்குமாறும், தலைமகனும் கேட்டுணருமாறும் கூறுவதாக அமைந்த, செய்யுள் இது.]

மகிழ்நன் மாண்குணம் வண்டுகொண் டனகொல்?
வண்டின் மாண்குணம் மகிழ்நன்கொண் டான்கொல்?
அன்ன தாகலும் அறியாள்

எம்மொடு புலக்கும், அவன் புதல்வன் தாயே.

தெளிவுரை: மகிழ்நனின் மாண்பமைந்த குணங்களை வண்டுகள் கைப்பற்றிக் கொண்டனவோ? அன்றி, வண்டுகளில் மாண்புள்ள குணங்களை நம் மகிழ்நன்தான் கைப்பற்றிக் கொண்டானோ? அன்னது எங்ஙனம் ஆகலுற்றதெனவும், அவன் புதல்வனின் தாயான தலைவியானவள் அறிந்திலள். எம்முடனே வீணே புலக்கின்றனளே!

கருத்து: 'அவள் தலைவனை அறியாமல் என்னைப் பழிப்பது அறியாமையாகும்' என்றதாம்.

சொற்பொருள்: மாண்குணம் - மாண்புற்ற குணம்; 'இல்லவள் மாண்பானால்' எனக் கூறும் குணவமைதி. வண்டினம் புதுமலரையே தேடிக்கொண்டு பறத்தலேபோலத்,தலைவனும் புதியரான பரத்தையரையே நாடித் திரிபவனாவான் என்றதாம். இதனால் என்னைக் குறித்துமட்டும் பழிப்பது எதற்காகவோ என்கின்றனள். 'அவன் புதல்வன் தாய்' என்றது, மனைவியை; அவள் புதல்வனைப் பெற்றுத் தளர்ந்து மெலிந்தமை தோன்றவும், அவளின் குடிகாக்கும் உரிமையினை எவரும் எதனாலும் பறித்தல் இயலாதென்பது விளங்கவும் சொல்லியதாம்.

விளக்கம் : 'அவன் புதல்வன் தாய்' என்று தலைவியைக் குறித்தது, அவ்வுரிமை பெற்றாள் அவள்; யான் அது பெற்றிலேன் என்றதுமாம். வண்டின் மாண்குணம் புதுமலரைத் தேர்ந்தே சென்று சென்று தேனுகாதலும், அதன்பின் அவற்றை முறையே அழித்துவிடுதலும் ஆம்; இக் குணத்தை நம் தலைவனிடமிருந்தே வண்டினம் பெற்றுள்ளன. ஆயின், முன் நுகர்ந்து கழித்த மகளிரையே ஓரொருகால் மீளவும் நாடிச் சென்று இன்புறுத்தலையும் நம் தலைவன் செய்வான்; இக்குணத்தை மட்டும் வண்டினத்தினும் மேலாக அவன் உடையன் என்றும் குறித்ததாம். ஆகவே, வண்டினத்தினும் ஒரோவகையில் தலைவனே நல்லன் என்றதுமாம். இப்போது, என்னையும் பிரிந்து பிறள்பாற் செல்லும் அவனை நினைந்து,