பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

153


யானும் அதுகுறித்து மெலிவுற்று வாடியிருப்பதறியாத தலைமகள் என்னையே அவனைத் தடுப்பதாகக் கூறிப் பழிப்பது சற்றும் பொருந்தாது என்றனளுமாம்.

அவட்காவது 'புதல்வனின் தாய்' என்னும் உரிமையும், அம் புதல்வனின் முகமும் செயலும் கண்டு மனந்தேறும் வாய்ப்பு உள்ளன; யானோ அதுவும் தானும் பெற்றிலேன் என்று மனம் நொந்து உரைத்தனளும் ஆம்.

இதனைக் கேட்கும் தலைமகன், தன் நிலைக்கு நாணி, தன் காதற் பரத்தைக்குத் தலையளி செய்தற்கு மனங்கொள்வான் எனவும், தன் புதல்வன் நினைவே மேலெழத் தன் மனையகம் சென்று, தலைவியைப் புலவி நீக்கி இன்புறுத்தி மகிழ்வான் என்பதும் கொள்க.

குறிப்பு : பரத்தையர் இவ்வாறு தலைவியைக் குறிக்கப் 'புதல்வன் தாய்' என்ற மரபை அடிக்கடி பேணுதல், அன்றைய சமுதாயம் அவர்க்கு அவ்வுரிமையை வழங்காததனை எண்ணிப் பொருமும் ஏமாற்றத்தாலேயே எனலாம்.

தலைவனுக்கே பிறந்தாரேனும், பரத்தையர்க்குப் பிறந்த புதல்வரும் புதல்வியரும், மனைவிக்குப் பிறந்தாரைப் போலக் குலப்பெருமைக்கும், குடியுரிமைச்சொத்துகளுக்கும், குடிப்புகழுக்கும் உரிமையாளர் ஆகமாட்டார் என்பதே அன்றைய சமுதாய நிலை. அவர் மீண்டும் தத்தம் குலத்தொழிலே செய்து வரலே அன்றைய ஒழுக்கமாயிருந்தது. இதற்கெல்லாம் மேற்குலத்தாரின் மேலாண்மை பிறப்புரிமை என்னும் நம்பிக்கையே காரணமாகவும் நின்றது.