பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

இத் தொகை நூலையும் தேடியாராய்ந்து செப்பமுற வெளி யிட்ட தமிழ் வள்ளன்மையாளர் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்களே யாவர். அவர்களின் தமிழார்வமும் முயற்சியுமே தமிழ்ச் செல்வங்களை நாம் எளிதாகப் பெற்று உணர்வதற்கு உதவுகின்றன. டாக்டர் அய்யர் அவர்களின் தமிழ் உள்ளத்தைப் போற்றி நினைந்து வணங்குகின்றேன். அவர்களைத் தமிழகம் வாழ்தற்பொருட்டு உருவாக்கி உதவிய மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களையும் அவர்கள் மாணவருள் ஒருவரும், அய்யரவர்களுக்கு இப் பணியிலே உதவியவர்களுமான திரிசிரபுரம் மகாவித்துவான் தியாகராசச் செட்டியாரவர்களையும் மனம் நினைந்து போற்றி வணங்குகின்றேன். இவ்விரு தமிழ்ப் பெரியார்கட்கும் நினைவாலயங்களோ, நினைவு அமைப்புக்களோ செயல்மறந்த தமிழகம் இன்னும் நிறுவிற்றில்லை என்பதையும், இவர்கள் நினைவுநாட்களைக்கூட ஆயிரமாயிரம் தமிழ்த்துறை மாந்தரும் போற்ற மறந்துள்ளனர் என்பதையும், மிகமிக வருத்தத் தோடே நினைக்கின்றேன். இவர்கள் தமிழால் தாம் வாழாமல், தமிழுக்காகத் தாம் வாழ்ந்த தகுதியாளர்கள் ஆவர்.

அய்யரவர்கள் பதிப்பிலே பழைய உரையும், செய்யுள் நலத்தைப் புரிந்து கொள்வதற்கான அரியபல குறிப்புக்களும் தெளிவாகத் தரப்பட்டுள்ளன. நாடெல்லாம் ஐங்குறுநூற்றின் செவ்வியினை அறிந்தறிந்து இன்புற உதவிய சிறப்புக்கு, இப்பதிப்பே முதல் உரிமையுடைய தாகும்.

இதன்பின் மர்ரே கம்பெனியாரின் மூலப்பதிப்பும், சைவ சித்தாந்த சமாசத்தார் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையவர்களின் துணையோடு வெளியிட்ட, சங்க இலக்கியப் பெரும் பதிப்பும் அருமையாக வெளிவந்தன.

இதன்பின், உரைப்பெருங் கடலான சித்தாந்தச் செம்மல் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளையவர்களின் மிக விரிவான உரைப் பதிப்பும் வெளிவந்தது.