பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருதம்

159


எப்போதும் தேனையே தேடிச்சென்று உண்ணலே தொழிலாகவுடைய வண்டினம், அதனை மறந்து, வாளாதே கூந்தலில் சென்று மொய்த்து முரலுதல், அவை அவ்வினை முடித்ததனாலே எனவும், கூந்தன் மலர்களை நாடி எனவும் கொள்க.

94. ஊர் இலஞ்சிப் பழனத்தது!

துறை : வரைவிடை வைத்துப் பிரிந்த தலைமகன், மீள்கின்றான் சொல்லியது.

[து. வி.: வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன், மீண்டு வரும்போது, அவளூரைத் தன் பாகனுக்குச் சுட்டிக்காட்டி உரைப்பதாக அமைந்த செய்யுள் இது.]

மள்ளர் அன்ன தடங்கோட் டெருமை
மகளிர் அன்ன துணையொடு வதியும்
நிழன்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்

கவின்பெறு சுடர்நுதல் தந்தை யூரே.

தெளிவுரை : கவின்பெற்று ஒளிசுடர்கின்ற நுதலுடையாளின் தந்தையது கழனிக்கண்ணே, தாமரை மிகுதியாக மலர்ந்திருக்கும் ஊரானது, மள்ளரைப் போன்ற பெரிய கொம்புகளையுடைய எருமையேறுகள், அவர்தம் மகளிரைப் போலும் தத்தும் துணைகளோடே சேர்ந்தவாய்த் தங்கியிருக்கும், நிழல்செறிந்த நீர்நிலையோடுகூடிய பழனத்திடத்தது ஆகும்!

கருத்து: 'அவ்வூரை நோக்கித் தேரினை விரையச் செலுத்துக' என்றதாம்.

சொற்பொருள்: மள்ளர் - போர் மறவர்: மகளிர் - அவர் தம் காதலியர். தடங்கோடு- பெரிய கொம்பு. இலஞ்சி - நீர் நிலை. நிழல் முதிர் - நிழல் செறிந்து அடர்ந்த. பழனம் - ஊர்ப் பொது நிலம். கவின் - எழில்: 'கவின் பெறு சுடர் நுதல்' என்றது, கவினைப் பெற்றுச் சுடரெரிக்கும் எழில் நுதல் உடையாளான தலைவியை நினைந்து கூறியதாம்.

விளக்கம்: 'எருமைகள் தத்தம் துணையோடும் சேர்ந்தவாக நிழன்முதிர் இலஞ்சிப் பழனத்து வதியும் ஊர்' என்றதும், அதனை மள்ளரும் அவர் மகளிரும் சேர்ந்து வதிதல்போல என்று உவமித்ததும், தான் தலைவியோடு கூழுச் சேர்ந்திருப்