பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

175


இரங்கலும், இரங்கல் நிமித்தமும் உணர்வெழுப்பும் உணர்வுகளாக, நெய்தல் மகளிரும் மாந்தரும், தாம்தாம் கொண்ட நினைவுகளின் போக்கை, பேசிய பேச்சுக்களின் பாங்கை இலக்கிய நயம்படச் சொல்லும் சொல்லாற்றல் நளினத்தை, இச் செய்யுட்களிலே சொல்தோறும் மிளிரக் காணலாம்.

உணர்வுடையோருக்கு, எல்லாப் பொருளுமே உயிர்ப்புடன் உளத்தோடே கலந்து உறவாடுகின்றன. உயிருள்ளனவும் உயிரற்றனவும் என்ற பேதம் இல்லாமல், எல்லாமே அவர்தம் சிந்தனைக்கு வித்தாகின்றன. கழியும் கானலும், கடலும் களனும், மீனும் உப்பும், நாரையும் குருகும், புன்னையும் தாழையும், நெய்தலும் அடும்பும். அன்றிலும் அலவனும், இவைபோலும் பிறவும், இலக்கிய நிலையிலே சான்றோரால் எடுத்துக் காட்டப்பெறும்போது, தத்தம் இயற்கையினும் பலவாகச் சிறப்புற்று விளங்கும் உயர்வினையும், நாம் இச்செய்யுட்களாற் காணலாம்; உணர்ந்து மகிழ்ந்து உவகையுறலாம்.

ஆசிரியர் அம்மூவனார்

ஐங்குறுநூற்றின், நெய்தல் சார்ந்த இந்த ஒரு நூறு குறுஞ்செய்யுட்களையும் செய்தருளிய சான்றோர் அம்மூவனார் என்பார் ஆவார். இவர், தாம் கடற்கரைப் பாங்கிலேயே தோன்றி வளர்ந்தவராதலால், இவர் செய்யுட்கள் உயிரோவியங்களாக, உயிர்ப்பாற்றலுடன் விளங்குகின்றன. மேலும், பாடுபொருளும் 'இரங்கலாகிய' நினைந்துநினைந்து சோரும் உளவேதனையாதலால், கற்பாரின் உள்ளங்களிலும் கசிவை விளைவித்து, நிலைத்து நிழலாடி நிற்கும் பாங்கினையும் பெறுகின்றது.

இவரை, ’மூவன்' என்னும் இயற்பெயருடையார் எனவும், 'அம்' என்னும் சிறப்புப்பெயர் உடன்சேர 'அம்மூவன்' என்று அழைக்கப் பெற்றவர் எனவும் கருதுவர். தொன்மை சுட்டும் ’மூ’ என்னும் சொல்லிலிருந்து தோன்றிய