பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



182

ஐங்குறுநூறு தெளிவுரை


104. கொண்கன் செல்வன் ஊர்!

துறை: புதல்வன் பெற்றுழித் தலைமகன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, முன்பு அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி, அவன் ஊர்நன்மை காட்டிச் சொல்லியது.

[து. வி.: தலைவியின் இல்லறவாழ்விலே, அவள் புதல்வனைப் பெற்றிருக்கும் மங்கலநாளில், அவளைக் காணச் சென்றனள் செவிலி. அவளுக்கு, அவன் ஊரைக் காட்டித் தோழி போற்றிச் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அன்னை வாழி! வேண்டு அன்னை! -- நம்மூர்ப்
பலர்மடி பொழுதின் நலமிகச் சாஅய்
நள்ளென வந்த இயல்தேர்ச்

செல்வக் கொண்கன் செல்வனஃ தூரே!

தெளிவுரை : வாழ்வாயாக அன்னையே! இதனையும் விருப்போட நீ காண்பாயாக. நம் ஊரிடத்தே, பலரும் அயர்ந்து உறங்கும் நள்ளிரவுப் பொழுதிலேயும், தன் சிறப்பெல்லாம் மிகவும் குன்றியவனைப்போல, நள்ளென்னும் ஒலியோடே, யாருமறியாதவகையிலே தேரூர்ந்து வந்தானாகிய, செல்வப்பெருக்குடைய தலைவனின் புதல்வனது ஊர் இதுவே! இதன் செவ்வியை உவப்போடு காண்பாயாக!

கருத்து: 'இவள் மனையறமாற்றும் ஊர்ச்சிறப்பைக் காண்பாயாக' என்றதாம்.

சொற்பொருள்: பலர் மடி பொழுது - பலரும் அயர்ந்துறங்கும் இரவின் நடுச்சாமப் பொழுது. சாஅய் - தளர்ந்து. நலம் - சிறப்பு. நள்ளென - நள்ளெனும் ஒலியோடே. இயல் தேர் - இயலும்தேர். கொண்கன் - தலைவன். செல்வன் - மகன்; புத்திரப்பேறே மிகச்சிறந்த குடிச்செல்வமாதலின், மகனைச் 'செல்வன்" என்றல் பழந்தமிழ் மரபு: இப்படியே மகளைச் 'செவ்வி' என்பதும் வழக்கு. இரு குடும்பத்தார்க்கும் அவர் உரியவர் என்பதும் நினைக்க.

விளக்கம்: "அன்று இவன் தோன்றிய தளர்ச்சி நோக்கி, இவன் வளமையை யாதும் அறியாதே, 'தலைவிக்குப் பொருந்துவனோ?' என நீயும் ஐயுற்றனையே? இதோ பார், அவன் மகனின் ஊர் வளமையை" என்று தன் தாய்க்குக் காட்டுகின்றாள் தோழி! 'மகன் குடியுரிமை தனதாகக் கொள்பவன்" என்றதால்,