பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

183


அவன் பிறந்ததும் கொண்கனூரை அவனுரிமையாக்கி நயமுடன் தோழி கூறினாள். இன்றும், தமிழகச் சிற்றூர்ப்புறங்களிலே மகவு பிறந்ததும். அதைக் குறித்தே, 'இன்னானின் தந்தை, இன்னானின் தாய், இன்னானின் வீடு' எனவெல்லாம் வழங்கும் உரிமைச்சால்பும் நினைக்க. பலர்மடி கங்குற்போதிலும், தான் தலைவிமேற் கொண்ட அன்புக் காதன்மிகுதியாலே தளர்ந்து வந்து இரந்து நின்றான் தலைவன். யாமும் அவன் வரவை நோக்கித் தளர்ந்திருந்தேம் எனத் தலைவன் தலைவியரின் ஒன்றுபட்ட இசைவான காதன்மையையும் நினைவுபடுத்தினள்.

இச் செய்யுள் பெரும்பாலும் மகப்பெறுதல் நிகழ்ச்சி தலைப்பிள்ளை எனினும்கூட, கணவனின் இல்லத்தேயே நிகழ்வது தான் நம் பழைய தமிழ்மரபு என்பதனைக் காட்டும். மகன் பிறக்கும் வீடு, அம் மகனுக்கே உரித்தான வீடாகவே இருத்தல் தானே, மிகவும் பொருத்தமும் ஆகும்.

மேற்கோள்: புதல்வற் பெற்றுழித் தலைவன் மனைக்கண் சென்ற செவிலிக்கு, அறத்தொடு நின்று வதுவை கூட்டிய தோழி. அவனூர் காட்டிக் கூறியது எனக் காட்டி விளக்குவர் நச்சினார்க்கினியர் - (தொல். கற்பு. 9).

இந்நாளைக்கு ஏற்பக் கொள்வதானால், மகப்பேற்றுக்குப் பின் தாயையும் மகனையும் தலைவனின் ஊரிற் கொண்டு சேர்த்த போதிலே, உடன்சென்ற செவிலித்தாய்க்கு, தோழி அவனூரின் சிறப்புக் காட்டிக் கூறியது என்று கொள்க.

105. நுதல் சிவந்தது!

துறை: அறத்தொடு நின்றபின், வேண்டுவன தருதற்குப் பிரிந்த தலைமகன், வரைவொடு வந்துழி, தலைமகள் நுதற்கண் முன்புள்ள பசப்பு நீங்கும் வண்ணம் தோன்றிய கதிர்ப்புக் காட்டி, செவிலிக்குத் தோழி சொல்லியது.

[து. வி. தலைவனுக்கு தலைவியைத் தருவதற்கு இசைந்த அவள் பெற்றோர், வரைபொருள் பற்றியும் வலியுறுத்தத் தலைவன் அது தேடிக்கொண்டு வருமாறு வெளியூர் நோக்கிப் போகின்றனன். அவன் சந்திப்பைப் பலநாள் இழந்த தலைவி சோர்ந்து தளர, அவள் நெற்றியும் பசலை படர்ந்தது. அவன் தமர் குறித்த வரைபொருளோடு வந்து, அதனைக் குவித்துப் பெருமிதமாக நின்றபோது, தலைவியின் பெற்றோரும் மகிழ்ந்து, வரைவுக்கும் உடன் பட்டுவிட்டனர். இஃதறிந்ததும்