பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வாழ்த்து

னைத்துச் செயல்களையும் தொடங்கும்போதில், முதற்கண் கடவுளைப் போற்றியே தொடங்குதல் நலமாகும் என்னும் கொள்கை, எந்த நூலின் தொடக்கத்தும் கடவுள் வாழ்த்து இருந்தாகவேண்டும் என்றதொரு முடிவுக்குப் பிற்காலத்திலே வழிவகுத்தது. அந்தப் பழைய நாளில், பாரதம் பாடிய பெருந்தேவனார், சங்கத் தொகைநூல்களுள் கடவுள் வாழ்த்து அமையாதனவற்றுக் கெல்லாம், தாமே கடவுள் வாழ்த்துப் பாடியமைத்தனர். அவ்வாறு, அவர் பாடிச் சேர்த்த கடவுள் வாழ்த்துக்களுள், இந்நூலின் கடவுள் வாழ்த்தும் ஒன்றாகும்.

வாழ்த்து, வணக்கம், பொருளியல்பு உரைத்தல் என்னும் மூவகை வாழ்த்து மரபுகளுள் இச்செய்யுள் 'பொருளியல்பு உரைத்தல்' ஆகும். இது கடவுளின் இயல்பைமட்டுமே கூறி, 'அவ்வியல்புடையானை வாழ்த்துவோம், போற்றுவோம்' என்றெல்லாம் கூறாமல், அவற்றைப் படிப்பவர்க்கே புலனாகுமாறு விட்டுவிடுவதாகும்.

மிகப் பிற்காலத்துப்போல் விநாயகரை வாழ்த்தியே எதனையும் தொடங்குதல் என்றில்லாமல், தத்தமக்கு விருப்புடைய கடவுளரை வாழ்த்திச் செல்லும் மரபையும், 'உமையொருபாகம் உடையானை' வாழ்த்தும் இச்செய்யுளால் அறியலாம். இவ்வாசிரியரே பல கடவுளரையும் வாழ்த்திப் பாடியுள்ள பொதுநோக்குப் பிற தொகைநூற் கடவுள் வாழ்த்துக்களால் காணப்படும்.


ஐங்.— 2