பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

195


கிளைத்துப் படர்ந்து தாழ்ந்து நிழல்செய்ய எனவும் பொருள் கூறலாம். கருங்கழியிலே செருந்தியின் மலர்கள் உதிர்ந்து கிடத்தலைப்போல. இவள் கூந்தலில் மலர்சூட்டிக் கொள்வன் என்பதும் கொள்க. 'மறந்தேம்" என்றது, அவன் அது மறநீதிலன் என்பதை வலியுறுத்தற்காம். 'நாணுடை நெஞ்சு' என்றது, அவனைக் களவிற் கூடும்போதும், 'விரைய வேட்டு வந்து என்னை மணங்கொள்க' என்று வலியுறுத்தற்கு மாட்டாது. வாயடைத்துவிட்ட நாணம் கவிந்த நெஞ்சம் என்றதாம்.

உள்ளுறை: இருங்கழியிடத்தும், பாசிலைச் செருந்திதாய அழகினைக் கொண்ட சேர்ப்பன் அவனாதலின், அவனும் தானாகவே வந்து நமக்கு நலன் விளைக்கும் பெருந்தன்மை உடையவனாவன் என்பதாம்.

பயன் : இதனைக் கேட்கும் தலைவன். தலைவியை வரைதற்கான முயற்சிகளை விரைந்து செயற்படுத்தலை மனங்கொள்வான் என்பதாம்.

113. எம்மை என்றனென்!

துறை : வரையாது வந்து ஒழுகும் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்ப, 'நெருநல் இல்லத்து நிகழ்ந்தது இது' எனத்தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: வரைவினை வேட்கும் தலைவி, மறைவாக நிற்கும் தலைவன் கேட்டு உணருமாறு, தன் தோழிக்குச் சொல்வது போல அமைந்ததே இச் செய்யுளும். நடந்ததாக நிகழ்ச்சியொன்றைப் படைத்து நயம்படவும் அத்தலைவி கூறுகின்றனள்.]

அம்ம வாழி, தோழி நென்னல்
ஓங்குதிரை வெண்மணல் உடைக்கும் துறைவற்கு
ஊரார், 'பெண்' டென மொழிய, என்னை
அதுகேட்டு 'அன்னாய்' என்றனள், அன்னை;

பைபய 'எம்மை’ என்றனென், யானே!

தெளிவுரை : தோழி வாழ்க! இதனையும் நீ கேட்பாயாக: நேற்று, "உயர்ந்த அலைகள் வெண்மணலிடத்தை வந்து அலைக்கும் துறைவனுக்கு, இவள்தான் பெண்டாயினாள் என்று என்னைச் சுட்டி ஊரார்கள் அவர் கூறினர். அதனைக்