பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

199


துறைவனான தலைவன், அன்னையின் அரிய காவலமைந்த நம் இல்லின் புறத்தேயும் வந்து நின்றனனே!

கருத்து: ’அவன் ஊறின்றிச் செல்லவேண்டுமே என்றதாம்.

சொற்பொருள் : பன் மாண் - பலமான மாட்சிகள்; இவை புன்னை நிழலும் பிறவும் போன்றவை; 'பன்மான் நம்மோடாடிய’ எனச் சேர்த்தும் பொருள் கொள்ளலாம். அடைகரை - கடற்கரைப் பாங்கா. அருங்கடி - அரிய காவல்; அதையுடைய தம் வீட்டைக் குறித்தது; ஆகு பெயர்.

விளக்கம் : 'அன்னை அருங்கடி வந்து, மறைஇ நின்றோன் என்பதனால், 'அவன் வருகையைத் தான் அறிந்த போதிலும் அவனை அவ்விடம் சென்று சேரற்கு விரும்பிய போதிலும் அன்னையின் அருங்காவலால் அதுதான் இயலாதேபோகப் பெரிதும் ஏக்கமுற்று வாடினதும் உணர்த்துகின்றாள். இதனால் வரைந்து மணங்கொண்டாலன்றி தலைவன் தன்னைப் பெறவியலாது என்பதை உணர்த்தி, அதனில் மனம் விரையத் தூண்டியதாம். 'பன்மாண் நம்மோடு ஆடிய தண்ணந் துறைவன்' என்றது, 'அத்தகு காதன்மை காட்டிக் களவிலே துய்த்து மகிழ்ந்தவன் முறையாக மணம்பேசிக் கொள்ளற்கு மறந்தனனே' என்ற ஏக்கத்தாற் கூறியதாம். இதனை உணரும் தலைவன். வரைந்து கோடலே இனி அவளை அடையும் ஒரே வழியென்று, அதன்பால் மனங் கொள்வான் என்க.

உள்ளுறை : 'பன்மாண் நுண்மணல் அடைகரை நம்மோடு ஆடிய துறைவனை' என்றது, இவன் முன்பு நம்பாற் காட்டிய அந்த அன்பினை மறந்தான் என்றும், அவ்வாறு ஆடிய அவனைப் பலரும் அறிவாராதலின், மறைந்து நிற்பதனைக் காணின் ஐயுற்று ஊறிழைப்பர் என்பதை உணரானாயினான் என்றும் உட்பொருள் புலப்படக் கூறியதாம்.

மேற்கோள் : 'பெற்ற வழி மலியின் தலைவிக்குக் கூற்று நிகழும்' என்பதற்கு, இச் செய்யுளை இளம்பூரணனாரும், நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவர் - (தொல், களவு, 21, உரை.).

116. மாலை வந்தன்று மன்ற!

துறை: எற்பாட்டின்கண் தலைமகன் சிறைப்புறத்து நின்று கேட்பத், தலைமகள் தோழிக்குச் சொல்லியது.