பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

201


[து. வி.: இதுவும் வரைதல் நினையாதே களவுறவிலேயே நாட்டம் மிகுந்தவனாகிய தலைவனுக்குத், தன் நிலைமை புலப்படுத்துவாள், தலைவி, தோழிக்குக் கூறுவாள்போற் கூறியதே யாகும்.]

அம்ம வாழி, தோழி! நலனே
இன்ன தாகுதல் கொடிதே - புன்னை
அணிமலர் துறைதொறும் வரிக்கும்

மணிநீர்ச் சேர்ப்பனை மறவா தோர்க்கே.

தெளிவுரை : வாழ்வாயாக தோழி! இதனைக் கேட்பாயாக! புன்னையின் அழகான மலர்கள் ஒழுங்குபட உதிர்ந்தவாய்த் துறைதோறும் கோலஞ் செய்யும், கருநீலக் கடல்நீரையுடையனாகிய தலைவனை, மறவாதே எப்போதும் நினைத்திருப்போமாகிய நமக்கும், நம் நலன் இத்தன்மைத்தாகிக் கெடுதல்தான் மிகக் கொடிதேயன்றோ!

கருத்து: 'எம் நிலைதான் இனி யாதாகுமோ?' என்றதாம்.

சொற்பொருள்: நலன் - பெண்மை நலனாகிய பெருங்கவின்! 'இன்னதாகுதல்' என்றது, பசலையால் உண்ணப் பெற்றுக் கெட்டழிந்ததனைக் காட்டிக் கூறியதாம். கொடிதே - கொடுமையானதே! அணிமலர் - அழகிய மலர்2. வரிக்கும் - ஒழுங்குபட உதிர்க்கும். மணிநீர் - நீலமணிபோலும் நீர்; தெளிநீர் என்றும் பாடம் கொள்வர்; அதுவாயின் 'கழிநீர்' என்று கொள்க.

விளக்கம்: 'சேர்ப்பனை மறவாதோர்' என்றது. சேர்ப்பன் தந்த இன்பத்தினையும், அவன் நினைவையும். இவ்வாறு, அவனை நாம் நம் மனத்தகத்தேயே மறவாதே கொண்டிருக்கும்போதும் அவன் பிரிந்தான் என நம் நலன் அழிந்து கெடுவதேன்? அது கொடிது அலவோ! என்கின்றனள். இதனால் தன் காதல் மிகுதியும் ஆற்றினும் அடங்காத் துயரமிகுதியும் புலப்படுத்தி, விரைய வரைதற்குத் தலைவனைத் தூண்டினளாம்.

உள்ளுறை: 'புன்னையின் அணிமலர் துறைதோறும் வரிக்கும் மணிநீர்ச் சேர்ப்பன்' என்றது, அதனைக் காண்பவன் உள்ளத்திலே தன் திருமணத்தைப் பற்றிய நினைவு தோன்றிற்றில்லையே' என்பதை உள்ளுறுத்துக் கூறியதாம். புன்னை மலர்வது நெய்தல் நிலத்தார் மணங்கொள்ளும் காலம். ஆதலால் இவ்வாறு சொல்லியதும் பொருந்தும் என்க.