பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



210

ஐங்குறுநூறு தெளிவுரை


பரத்தை கூற்றாயின், ‘திரைபாய்வோளைத் தலைவியெனவும், தோழி கூற்றாயின் பரத்தையாகவும் கொள்க: அவளையே சென்று இப்போதும் இன்புறுத்துக' என்றதாம்.

124. கடல் தூர்ப்பாள்!

கண்டிகும் அல்லமோ, கொண்க! நின்கேளே!
வண்டற் பாவை வௌவலின்

நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே!

தெளிவுரை: கொண்கனே! தானிழைத்து விளையாடிய வண்டற்பாவையைக், கடலலை மேலிவர்ந்து வந்து அழித்ததனாலே சினங்கொண்டு, நுண்ணிய பொடிமணலை வாரி எறிந்து கடலையே தூர்க்கா நின்றவளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டுள்ளேம் அல்லமோ! . கருத்து: 'ஏன் மறைத்துப் பொய் புகல்வாய்?' என்றதாம்.

சொற்பொருள்: வண்டற்பாவை - மணற்பாவை. வௌவல் - கவர்ந்து போதல். நுண்பொடி - நுண்ணிய பொடி மணல். அளைஇ - அள்ளித் தூற்றி.

விளக்கம்: தன் மணற்பாவையைக் கடலலை அழித்ததற்கே அவ்வாறு சினந்து ஆத்திரப்பட்டவள், நீயும் கொடுமை செய்தால் ஏற்றுப் பொறுமையாயிருப்பாளோ? ஆதலின் அவள்பாலே செல்க என்று தோழி கூறியதாகக் கொள்க.

பரத்தை கூற்றாயின், நுண்பொடியளை இக் கடலைத் தூர்த்தல் இயலாதவாறுபோல, நின்னை அலர்கூறி என்னிடமிருந்து மீட்டுக்கொள்ளவும், அவளால் ஒருபோதும் இயலாது என்றதாம்.

125. அழுது நின்றோள்!

கண்டிகும் அல்லமோ, கொண்க! - நின் கேளே?
தெண்டிரை பாவை வௌவ

உண்கண் சிவப்ப அழுதுநின் றோளே!

தெளிவுரை: கொண்கனே! தெளிந்த கடலலையானது, தானிழைத்த வண்டற் பாவையினைக் கவர்ந்து போகக்கண்டு தன் மையுண்ட கண்கள் சிவப்ப அழுது நின்றோளான, நிவி உரிமையாட்டியை, நாமும் கண்டுள்ளேம் அல்லேமோ !