பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



212

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: "அவள் புலவியை நீக்கி அவளையே போய் இன்புறுத்துக" என்றதாம்.

விளக்கம்: தும்பைமாலை - தும்பைப் பூவாற் கட்டிய மாலை. 'இளமுலை" என்றது பருவம் முதிராதாள் என்றற்கு; இது பழமை சுட்டியது. அன்று நின்னை விலக்கினாள், இன்றும் நின்னை விலக்காளோ என்பதும் தோழி கூற்றாகும்.

128. பாவை ஊட்டுவோள்!

கண்டிகும் அவ்லமோ, கொண்க! நின்கேளே?
உற அ வறுமுலை மடா அ

உண்ணாப் பாவை யூட்டு வோளே!

தெளிவுரை: கொண்கனே! உண்ணுதல் செய்யாத தன் மரப்பாவைக்கு, பாலூறிச் சுரக்கும் நிலையெய்தாத தன் வறிய முலையை வாயிலிட்டுப் பாலூட்டி மகிழ்வாளான, நின் உரிமையாட்டியை, யாமும் கண்டுள்ளேம் அல்லமோ!

கருத்து: 'அவள் ஆர்வத்தைச் சிதைத்தனையே?' என்றதாம்.

சொற்பொருள்: உறாஅ வறுமுலை - பால்சுரத்தலைப் பெறாத முலைகள்; ஊறா வறுமுலை எனவும் பாடம். மடாஅ - வாயிலிட்டு ஊட்டுவாளாக. உண்ணாப் பாவை - மரப்பாவை.

விளக்கம்: மனைவாழ்விலே அத்துணை ஆர்வத்தை அன்றே உடையாளை மறந்து, பரத்தைபாற் செல்வதேன் என்று தோழி கூறியதாகக் கொள்க. பரத்தை கூற்றாகக் கொள்ளின், தலைவியைச் சிறுமியென நகையாடிக் கூறியதாகக் கொள்க.

129 * * *

130 * * *

இப் பகுதி பொதுவாக இளமையின் அறியாமைச் செயல்களையே சுட்டியவாய் அமைந்துள்ளன. பரத்தை கூற்றாயின், அத்தகு சிறுமித்தன்மை மாறாதவள் தலைவி என்று குறித்ததாகவும், தோழி கூற்றாயின், அத்தகு மெல்லுணர்வுகளைச் சிறுபோதிலேயே கொண்டவளாதலை அறிந்தும், தலைவன் அவளை வருந்தச் செய்வதன் கொடுமையைச் சுட்டிக் கூறியதாகவும் கொள்க.