பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. பாணற்கு உரைத்த பத்து

பாணன் தலைவனின் வாயில்கள் (ஏவலர்கள்) பலருள் முதன்மையான ஒருவன். இவனே தலைவனைப் பரத்தையருடன் சேர்த்துவைப்பவன். கலைஞனாயினும், தலைவனின் சபல உணர்வுகளுக்குத் துணைநின்று பலரின் தூற்றலையும் பெற்று வருபவன். அவற்றை அதிகமாகப் பாராட்டாதே தலைவனின் ஏவலை நிறைவேற்ற முயலும் இயல்பும் கொண்டவன். இவன் தலைவன் பொருட்டாகத் தலைவிபாற் சென்று, தலைவன் சொன்னதைச் சொல்லும் வாயில் உரிமையும் பெற்றவன். தலைவனின் புறத்தொழுக்கத்தால் வருந்தி வாடியிருந்த தலைவியிடம், பாணன் சென்று, 'தலைவனின் காதன்மைபற்றிக் கூறி, அவனை வெறுக்காது ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றான். அவனுக்குத் தலைவி விடைசொல்லுவதாக அமைந்தவையே இந்தப் பத்துச் செய்யுட்களும் ஆம்.

131. கௌவை எழாதேல் நன்று!

துறை : வாயில் வேண்டிவந்த பாணன், தலைமகனது காதன்மை கூறினானாகத், தலைமகள் வாயில் மறுப்பாள் அவற்குக் கூறியது.

[து. வி.: தலைவனைத் தலைவி உவந்தேற்று இன்புறுத்த வேண்டும் என்று கேட்கின்ற பாணன், தலைமகன் அவள்மீது கொண்டுள்ள காதலன்பைப் போற்றிக் கூறுகின்றான். அதற்கு இசைய மறுப்பவள், அவனுக்குச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.]

நன்றே, பாண! கொண்கனது நட்பே -
தில்லை வேலி யிவ்வூர்க்

கல்லென் கௌவை எழாக் காலே!

தெளிவுரை : பாணனே, கேளாய்! தில்லை மரங்களையே வேலியாகப் பெற்றுள்ள இவ் வூரின்கண்ணே, கல்லென்னும்படி அலரானது எழுந்து பரவாதாயின், தலைவனது நட்பும் பெரிதும் நன்றே யாகும்!