பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



214

ஐங்குறுநூறு தெளிவுரை


கருத்து: 'ஆனாற் கௌவைதான் எழுந்து, எங்கும் பரவி, அலராகின்றதே' என்றதாம்.

சொற்பொருள் : தில்லை - ஒருவகை மருந்துமரம்; தில்லைப்பால் மேனியிற் பட்டால் புண்ணாகும் என்பார்கள். ஊரைச் சுற்றித் தில்லைமரங்கள் அடர்ந்திருந்தமையின் 'தில்லை வேலி இவ்வூர்' என்றனள். நெய்தற் பாங்கில் இம்மரம் மிகுதி.

விளக்கம்: 'கௌவை எழாஅக்கால் நட்பு நன்று' என்றது, 'எழுந்துவிட்டமையின், அதுதான் நன்றாகாதாயிற்று; எனவே, நின் வேண்டுதலை யாம் ஏற்கோம்' என்றதாம். தில்லையைத் தழுவுவார் உடற்புண் உறுதலேபோலத் தலைவனைத் தழுவுவாறும் மனப்புண்ணும் உடல்நலிவும் உறுவர் என்றதுமாம்.

132. அலராகின்றது அருளும் நிலை!

துறை : வாயில் வேண்டிவந்த பாணன், "நீர் கொடுமை கூறல் வேண்டா; நும்மேல் அருளுடையர்" என்றாற்குத் தலைமகள் சொல்லியது.

[து.வி.: "அவர்மீது கொடுமை சொல்லாதீர்; அவர் நும்மீது என்றும் பேரருளுடையவர்" என்று தலைவிக்குப் பாணன் கூற, அது கேட்டு, அவள் விடையிறுப்பதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி, பாண! புன்னை
அரும்புமலி கானல் இவ்வூர்

அலரா கின்றவ ரருளு மாறே!

தெளிவுரை: பாணனே, வாழ்க நீ! புன்னையின் பூவரும்புகள் மலிந்து கிடக்கின்ற கானற்சோலையினையுடைய இவ்வூரிடத்தே, அவர் நமக்கு அருளுந்திறந்தான், பலராலும் பழித்துப் பேசும் அலராக உள்ளதே!

கருத்து: 'அவர் அருள் மறந்தார்' என்றதாம்.

சொற்பொருள்: கானல் கானறசோலை. அருளுமாறு - அருளும் திறம். . விளக்கம்: அரும்புமலி கானலைக் கொண்ட இவ்வூரும் அவரைக் குறித்தெழுந்த அலரினாலே மலிந்ததாயிற்று; ஆதலின்