பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

217


135. யாம் வருந்தேம்!

துறை : பரத்தை ஒருத்தியைத் தலைப்பெய்வான் வேண்டி, அதனைத் தலைமகன் மறைத்து ஒழுகுகின்றதறிந்த தலைமகள், அவன் கேட்குமாற்றாற் பாணற்குச் சொல்லியது.

[து. வி.: பரத்தை ஒருத்தியைத் தனக்கு உரியவளாக்கிக் கொள்ள முயல்கின்ற தலைவன், அதனை மறைத்தபடியே நடந்து வருகின்றான். இதனை அறிந்தாள் தலைமகள். அவன் கேட்குமாறு, அவன் பாணனுக்குச் சொல்வாள் போலச் சொல்லுகின்றாள்.]

பைதலம் அல்லேம், பாண! பணைத்தோள்
ஐதமைந் தகன்ற வல்குல்

நெய்தலம் கண்ணியை நேர்தல்நாம் பெறினே!

தெளிவுரை: பாணனே! மூங்கிலனைய தோள்களையும், மெல்லிதாய் அமைந்து அகன்ற அல்குல் தடத்தினையும், நெய்தலின் மலர்போலும் அழகிய கண்களையும் உடையாளை, யாம் எம் எதிரேயே காணப்பெறுவேமாயினும், அது குறித்து யாதும் யாம் வருத்தம் அடைவோம் அல்லேம்!

கருத்து: 'அது அவன் விருப்பிற்கு உட்பட்டது' என்றதாம்.

சொற்பொருள் ; பணை - மூங்கில். ஐது - மெல்லிது. 'நெய்தல் மலர் போலும் அழகிய கண்ணி' என்பதும், பிறவும் இகழ்ச்சிக் குறிப்பாகச் சொன்னதாகக் கருதலே பொருந்தும்.

விளக்கம் : இதனைக் கேட்கும் தலைவன், தலைவி தன்னுடைய பரத்தைமை ஒழுக்கக் கேட்டை அறிந்தாள் என்பது தெளிதலின், மேலும் அதனைத் தொடராது திருந்துவன் என்பதாம். 'நேர்தல் பெறினே' என்றது, அது பெறாததனைக் கூறியதாம். இது தலைமகன் பாகனிடம் சொல்வதுபோலப் படைத்துத் தலைவி நகையாடிக் கூறியதெனக் கொள்ளுதல் இன்னும் சிறப்பாகும்.

136. நாணில நீயே!

துறை: வாயிலாய்ப் புகுந்து, தலைமகன் குணம் கூறிய பாணற்கு, வாயின் மறுக்கும் தலைமகள் சொல்லியது.