பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



222

ஐங்குறுநூறு தெளிவுரை


தெளிவுரை: பாணனே! துறை பொருந்திய கொண்கன் பிரிந்தனனாக, சந்து பொருந்தி விளங்கும் எம் ஒளிவளைகள் நெகிழ்ந்து நீங்கிப் போயினதான இந்த அல்லநிலைமையினைக் காண்பாயாக. எம் இந்நிலையினைத் தலைவனிடம் சென்று நீதான் சொல்லுதற்கு உரியை யாவாய்!

கருத்து: 'என் மெலிவைச் சொல்லி அவரை வரச் செய்க' என்பதாம்.

சொற்பொருள்: துறை - கடற்றுறை. இறை - சந்து. கேழ் - பொருந்திய. எல்வளை - ஒளிவளை.

விளக்கம்: தலைவன் சார்பினனே பாணன் எனினும், தன் மெலிவை நோக்கியாவது. தலைவனிடம் சென்று, தன் நலிவைப் பற்றிச் சொல்லி, அவனை இல்லத்திற்குத் திரும்புமாறு செய்வதற்கு வேண்டுகின்றாள் தலைவி.

பரத்தையிற் பிரிந்தவழித் தலைவன் பாணனின் பேச்சையே பெரிதும் கேட்பவனாகிய மயக்கத்தோடு விளங்குவான்; ஆதலால், இவ்வாறு, அவனையே தனக்காக அவனிடத்தே தூது செல்ல வேண்டுகின்றாள் தலைவி. தலைவிபாலும் மதிப்பும் அன்பும் மிகவுடையனாதலின், பாணனும், அவள் நலமழியாது விளங்கத் தலைவனிடம் சென்று பரிந்துரைப்பான் என்றும் கொள்க. 'அவன் பிரிய இறைகேழ் எல்வளையும் பிரிந்தது' என்ற சொல்லிலே சோகம் அளவிறந்து புலப்படுதலையும் நினைக்க!

பரத்தைமை உறவிலே தலைவனுக்கு வேண்டியவே செய்யும் வாயிலாகச் செயற்படுபவன் பாணனே! ஆகவே, அவன் செயலால் புண்பட்ட தலைவியேனும், தலைவனை அடைய விரும்பும் ஏக்கத்தின் மிகுதியினால், அந்தப் பாணனையே இப்படி உதவுதற்கு வேண்டும் அவலத்தையும் காண்கின்றோம். கலைக்குடிப் பாணன், குலமகளிரின் இல்லற அமைதியைக் கலைத்துக் கெடுக்கும் கொடியவனாகவும், தன் சுயநலத்தால் பண்பிழந்து நடக்கும் அவலத்தையும் காண்கின்றோம். அவனுக்கு ஒரு முதன்மையும் சில சமயம் இப்படி ஏற்பட்டு விடுவதனையும் பார்க்கின்றோம்.