பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226

ஐங்குறுநூறு தெளிவுரை


சொற்பொருள்: புள்ளிமிழ் - புட்கள் ஆரவாரிக்கும். முனிவு - வெறுப்பு: அது பிரிவாற்றாமையினாலே அழகு கெட்டு மெலிந்ததனால் விளைந்தது.

விளக்கம்: களவுக்காலத்தே, எக்கரிடத்து ஞாழற் சோலையிலே போற்றிக் கூடிமகிழ்ந்த நிகழ்ச்சியையும், அவன் இப்போது அவளை வருத்தி நலியச்செய்யும் கொடுமையையும், தலைவியின் தோள்நலத்தின்மீது சார்த்தித். தோழி இவ்வாறு வெறுப்புற்றுக் கூறுகின்றனள். 'தடமென் தோள்' பற்றிக் கூறியது, முன் அவனே வியந்து பாராட்டியதனைச் சொல்லிக் காட்டியதுமாம்.

உள்ளுறை: 'ஞாழலின் பூச்சினை வருந்தப் புள்ளினம் தங்கி ஆரவாரிக்கும்' என்றது, இவள் நின் பிரிவால் வருந்தி நலிய, நீயோ பரத்தையரோடு களித்திருப்பவனாவாய் என்றதாம். வரைவிடைப் பிரிவாயின், நீ நின் செயலிலேயே மனஞ்செலுத்தி இவளை மறந்திருப்பாய் என்றதாகக் கொள்க.

பிறபாடம் : நின் துயில் துனிவுசெய்த - இப்பாடத்திற்கு, முன் இவட்கு இனியசெய்த நின் முயக்கம், நீ புறத்துத் தங்கி வந்தாய் என்னும் நின் வேற்றுறவின் நினைவால், இதுகாலை வெறுப்பினைப் பயப்பதாயிற்றுப் போலும் என்று கூறினளாகக் கொள்க.

144. இனிப் பசலை படராது!

துறை: 'தலைமகன் வரைந்துகோடல் நினையாது, களவொழுக்கமே விரும்பி ஒழுகா நின்றான்' என்பது அறிந்து வேறுபட்ட தலைமகள், 'அவன் கூறியவாற்றால் இனிக் கடிதின் வரைவன்; ஆற்றாயாகாதது ஒழியவேண்டும்' என்ற தோழிக்குச் சொல்லியது.

[து. வி.: தலைவன் சொல்லிச் சென்றவாறு வரைந்து வந்திலன் என்று வருந்தியிருக்கின்றாள் தலைவி. அவளுக்கு, அவன் சொற்பிழையானாய் வந்து, நின்னை முறையே மணப்பான் என்று தோழி சொல்லித் தேற்ற முயல்கின்றாள்.]

எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த்
தனிக்குரு குறங்குந் துறைவற்கு

இனிப்பசந் தன்று - என் மாமைக் கவினே!