பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

227


தெளிவுரை : எக்கரிடத்தே, ஞாழலின் பூங்சொத்துக்கள் பொருந்திய சோலைக்கண்ணே, துணைபிரிந்து தனிமைப்பட்ட குருகானது உறக்கங்கொள்ளும் துறைவனின் பொருட்டாக, என் மாமைக்கவின், இப்போது பசப்பெய்துவ தாயிற்றே!

கருத்து: 'இதுகாறும் சொற்பேணாதவன் இனியுமோ பேணுவான்? என்றதாம்.

சொற்பொருள்: பொதும்பர் - சோலை. தனிக்குருகு - துணைபிரிந்து தனித்திருக்கும் குருகு. உறங்கும் - தூங்கும். மாமைக் கவின் - மாந்தளிரனைய கவின்.

விளக்கம்: 'எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குருகு உறங்கும்’ துறைவனாதலின், நம்மையும், நாம் அளித்த இன்பத்தையும், அன்பையும் அறவே மறந்தானாய்த் தனித்து வாழ்தல் அவனுக்கு எளிதுதான். ஆயின், அவனை நினைந்து நினைந்து என் மாமைக்கவினும் இப்போது பசந்து போயிற்றே! இதற்கு யாது செய்வாம்? என்பதாம்.

'இப்போது பசந்தது' என்றது, முன்னர் அவன் சொல்லை வாய்மையாகக் கொண்டு ஏமாந்திருப்பேமாகிய நம் நிலை அறியாமல், 'அவன் புதுவதாகச் சொன்ன உறுதியை நம்பி வந்து நீ கூறுதலால்' என்று கொள்ளலாம்.

உள்ளுறை: 'எக்கர் ஞாழல் குருகு தனித்து உறங்கும் என்றது, காலம் வாய்த்தவிடத்தும் வரைந்து கொண்டு ஒன்றுபட்டு வாழ்தலை நினையாதே, தனித்துறைதலையே விரும்பும் இயல்பினன் தலைவன் என்றதாம்.

145. பசலை நீக்கினன் இனியே!

துறை: வரைவு மறுத்த தமர் உடம்படுமாற்றால், சான்றோரைத் தலைமகன் விடுத்ததறிந்த தோழி, தலைமகள் கேட்குமாற்றால் சொல்லியது.

[து. வி.: தலைவன் வரைந்து வந்தபோது, தலைவியின் தமர் இசைவளிக்காதே மறுத்துப் போக்கினர். அவன், அதன் பின், அவர் உடம்படுமாறு சான்றோரை அவர்பால் விடுக்கின்றான். அவர் வரத் தமரும் உடம்படுகின்றனர். இஃதறிந்த தோழி, தலைமகள் கேட்க, அச்செய்தியைக் கூறுகின்றாள்.]