பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

233


[து. வி: முன்பொருகாலத்துத் தலைவி வருந்துமாறு பிரிந்து சென்ற தலைவன், மீண்டும் வந்து அவளைத் தெளிவித்துக் கூடியின்புற்றிருந்தான். அவளும், அவன் தன் சபலத்தை மறந்தான் என்று மனநிம்மதி பெற்றாள். மீண்டும் அவள் வாடப்பிரிந்துபோய்த் திரும்பவும் வந்து அவளை முயங்க விரும்பினான் தலைவன். அவள் அவன் முயக்கிற்கு விரும்பாது ஒதுங்கினாள் 'ஏன் இவ்வாறு செய்தனை?' எனத் தோழி வினவ, அவளுக்குத் தலைவி, தலைமகனும் கேட்டுத் தெளியுமாறு சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினைப்
புணரி திளைக்கும் துறைவன்

புணர்வின் இன்னான் அரும்புணர் வினனே!

தெளிவுரை: எக்கரிடத்தேயுள்ள ஞாழலின் நறியமலர்களையுடைய பெருங்கிளையானது கடலலைகளைச் சென்று தழுவி இன்புறுகின்ற துறைவன் நம் தலைவன். அவன் நம்மைப் புணரினும், அதனால் இன்பமளித்தலா யமையாது. தொடரும் பிரிவின் நினைவாலே எமக்குத் துன்பந் தருபவனாகவே இருப்பான்; மேலும், எப்போதோ நம்மை அருமையாக வந்து கூடிச்செல்பவன் அவன்; அவன் தழுவலை இன்றும் பெறாததால் யாதும் எமக்கு வருத்தமில்லை காண்!

கருத்து: 'அவன் அணைப்பிலே இன்பம் கொள்ளேன்' என்றதாம்.

சொற்பொருள்: புணரி - கடல் அலை. திளைக்கும் அலையைத் தழுவித் தழுவி மகிழ்ந்தாடும். புணர்வின் - புணர்ச்சிக் காலத்தில். அரும்புணர்வினன் - அருமையாக எப்போதே வந்து சேர்பவன்.

விளக்கம் : இதனால், அவன் நாட்டமெல்லாம், பரத்தையர் பாலேயாக, அவன் ஊர்ப்பழி கருதியே எம்மையும் நாடி வருவானேயன்றி, எம்மை முற்றவும் மறந்துவிட்ட அன்பிலாளனே காண் என்றனளாம்.

உள்ளுறை : எக்கர் ஞாழல் நறுமலர்ப் பெருஞ்சினையானது புணரியால் மோதுண்டு திளைக்கும் துறைவன் என்றது. அவ்வாறே நிலையான மனையற வாழ்விலே நில்லாது, பரத்தையரால் தழுவப்பெற்றறுத் தன் பெருமையும் பொருளும் சிதைப்பதிலே ஈடுபடும் இயல்பினன் தலைவன் என்றதாம்.