பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

237


151. நெக்க நெஞ்சம் நேர்கல்லேன்

துறை : வாயில் வேண்டிய தோழிக்குத் தலைமகள் வாயில் மறுப்பாள் சொல்லியது.

[து. வி. தலைவனை ஏற்றுக்கொள்வாய் என்று தன்னை வந்து வேண்டிய தன் தோழிக்குத். தலைவியானவள் அதற்கு இசைய மறுப்பாளாகச் சொல்லியதாக அமைந்த செய்யுள் இது.

வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக்
காணிய சென்ற மடநடை நாரை
மிதிப்ப, நக்க கண்போல் நெய்தல்
கட்கமழ்ந் தானாத் துறைவற்கு
நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே!

தெளிவுரை : வெள்ளாங் குருகின் பிள்ளையே போலும் என்று காணச்சென்ற மடநடையினையுடைய நாரையானது மிதிப்பவும், அதன் மடச்செயலைக் கண்டு நகைப்பதுபோல மலர்ந்த கண்போன்ற நெய்தலின் தேன்மணம் இடைவிடாதே கமழும் துறைவனுக்கு, நெகிழ்ந்து நெகிழ்ந்து வலியிழந்துபோன நெஞ்சத்தினையுடையளான நான், அவரை ஏற்றலாகிய அதற்கு இனியும் இசையேன்!

கருத்து: 'அவரை இனியும் ஏற்பதில்லேன்' என்பதாம்.

சொற்பொருள்: மடநடை - மடமையோடு கூடிய நடை; கால் மடங்கி நடக்கும் நடையும் ஆகும். நக்க - நகையாடிய. கள் - தேன். நெக்க- நெகிழ்ந்து சிதைந்த. நோகல்லேன் இசையேன். பிள்ளை - பறவைக்குஞ்சின் பெயர். நாரை - நீர்ப்பறவை வகை; நாரம் (நீர்) வாழ் பறவை நாரையாயிற்று; நாரணன் என வருவதும் காண்க.

விளக்கம்: செத்தென - போலும் என்று; செத்ததென்று எனலும் பொருந்தும். அப்போது, மரத்திலே உடன்வாழ் உறவு நெருக்கத்தால் சாவு விசாரிக்கச் சென்றதென்று கொள்க. மடநடை - நடைவகையுள் ஒன்று; கடுநடை தளர்நடை போல்வது; இது கால் மடங்கி நடக்கும் நடை. நக்க - நகைத்த; இது நெய்தல் இதழ்விரிந்து மலர்ந்திருத்தலைச் சுட்டியது; அது மலர்தல், நாரையின் செயல்கண்டு நகைப்பதுபோலும் என்க. கள் - தேன் ; தேனே பண்டு கள்ளின் மூலப்பொருளாயிருந்தது.